×

மண் மேவி நிற்பதால் சிறுமழைக்கே நிரம்பி வழியும் அவலம் தூர்வார ஏங்குது சோத்துப்பாறை அணை: கூடுதல் நீர் தேக்கினால் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்

பெரியகுளம்: பெரியகுளத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசனம் அளிக்கும் சோத்துப்பாறை அணை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால், இதுவரை தூர்வாரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. பெரியகுளம் பகுதியில் மா மரங்கள், தென்னை மரங்கள் அதிகம் உள்ளதுடன், நெல் விவசாயமும் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் ஒரு அணை வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் கடந்த 1983ம் ஆண்டு நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது சோத்துப்பாறை அணை திட்டத்துக்கு ரூ.8.33 கோடி திட்ட மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். அதன்பின் சில காலம் விறுவிறுப்பாக கட்டப்பட்டு வந்த அணை திடீரென தொய்வடைந்து பின் முற்றிலுமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக 1996ல் பெரியகுளம் எம்எல்ஏ மூக்கையா அணை குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செனறார். இதைத்தொடர்ந்து சோத்துப்பாறை அணைக்கு மீண்டும் திட்ட மதிப்பீடு தயார் செய்து ரூ.29 கோடி மதிப்பீட்டில் ஈசிசிஐ நிறுவனத்திடம் கட்டுமான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. உலக வங்கி நிதியுதவியுடன் துவங்கிய கட்டுமான பணிகளை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் விரைவுபடுத்தி 2001ம் ஆண்டு அணையை கட்டி முடிக்க செய்தார். 2001 அக்டோபர் மாதத்தில் சோத்துப்பாறை அணை முதல் முறையாக நிரம்பி வழிய துவங்கியதால் அப்போதைய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் தாமரைக்குளம், பாப்பையன்பட்டி, பெரியகுளம் கண்மாய்கள் வழியாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை 126 அடி உயரம். அணையின் நீர்பிடிப்பு பகுதி 100 மில்லியன் கனஅடியாக உள்ளது. இருந்தபோதிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணியின்போது இருந்த கற்கள், பாறைகள்,  மணல் ஆகியவை அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணை பகுதியில் சிறிய மழை பெய்தாலும் அணை நிரம்பி வழிய துவங்கும். மேலும் 2 நாட்களில் அணை நீர் முற்றிலுமாக வடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம்தான்.  சோத்துப்பாறை அணையை தூர்வார கோரி விவசாயிகள் பலமுறை முறையிட்டும்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் சங்க பொறுப்பாளர் சந்தானம் கூறுகையில், ‘‘சோத்துப்பாறை அணையிலிருந்து வெளியேறும் நீரால் இப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்கு பெரும் நன்மை பயக்கும். எனினும் பல ஆண்டுகளாக பல கோரிக்கை மனுக்கள் அளித்தும் அணையை தூர்வாராமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அணை விரிவானால் அதிகம் சேமிக்கலாம்
பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் கூறுகையில், ‘‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் கட்டி முடிக்கப்பட்ட அணை என்பதால் தமிழக அரசு இந்த அணையினை தூர்வாராமல் கவனிப்பின்றி விட்டுள்ளது. இந்த அணை முறையாக தூர்வாரி, நீர்ப்பிடிப்பு பகுதியை விரிவுபடுத்தினால் நிறைய தண்ணீர் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பூங்கா இல்லாததால் பெரும் ஏமாற்றம்
சுற்றுலாப்பயணிகள் சார்பில் பெரியகுளம் நகர் நலச்சங்க செயலாளர்  அன்புக்கரசன் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் தேக்கடி, சுருளிஅருவி,  கும்பக்கரை, வைகை அணை, மஞ்சளாறு அணை ஆகிய சுற்றுலாத்தலங்கள் பட்டியலில்  இந்த சோத்துப்பாறை அணையும் உள்ளது. இந்த அணை கட்டும்போது  சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் கட்ட  முடிவு செய்திருந்தும் இதுவரை கட்டப்படவில்லை. இது சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே அணையை உடனே தூர்வாரி  சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஏற்பாடு செய்து தர  வேண்டும்’’ என்றார்.

Tags : 5000 acres ,irrigated ,additional, water reservoirs
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...