×

நவீன டெக்னாலஜியுடன் நாடோடி மக்களுக்காக உருவான நடமாடும் வீடு

*ஆட்டோவில் ஆர்கிடெக் அசத்தல் வடிவமைப்பு

சேலம் : இன்றைய இளைஞர்கள், நவீன கண்டுபிடிப்புகளின் பிரம்மாவாக திகழ்ந்து நம்மை பிரமிக்க வைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதற்கு சாட்சியமாக நாடோடி மக்களை கருத்தில் கொண்டு நவீன டெக்னாலஜியுடன்  ஆர்கிடெக் பட்டதாரி உருவாக்கியுள்ள நடமாடும் வீடு, கட்டுமான வல்லுநர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவர் குணசேகரன். எலக்ட்ரிகல் கடை நடத்தி வரும் இவரது மகன் அருண்பிரபு(23). பி.ஆர்க் பட்டதாரியான இவர், பெங்களூருவில் பில்போர்ட்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 இந்நிலையில் சரக்கு ஆட்டோவில் நவீன டெக்னாலஜிகளுடன் அருண்பிரபு வடிவமைத்துள்ள நடமாடும் வீடு, சமூகவலை தளங்களில் வைரலாகி விழிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது குறித்து அருண்பிரபு கூறியதாவது:
கட்டுமான துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் படிக்கும் காலத்திலேயே இருந்தது. குறிப்பாக சென்னையில் படிக்கும் போது,  இடநெருக்கடியில் சிக்கி தவித்து வாழும் மக்கள், நாடோடிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்களின் சிரமங்களை தினமும் பார்ப்பேன். இவர்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தித்த போது, உருவானது தான் இந்த வீடு.

‘போர்டபுள் ஹவுஸ்’ என்னும் இந்த வீட்டை உருவாக்குவதற்காக 5 மாதங்களுக்கு முன்பு ₹37ஆயிரம் மதிப்பில் பழைய சரக்கு ஆட்டோ ஒன்றை வாங்கினேன். அதன் பாடியை அகற்றி, பழைய பஸ் பாடியை பயன்படுத்தி மறுசுழற்சி முறையில் வீடு கட்டத்துவங்கினேன். வழக்கமாக நாம் வசிக்கும் வீட்டிலுள்ள அனைத்து அம்சங்களும் அதில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, ரெடிமேட் கழிப்பறை, மொட்டை மாடி, சிட்அவுட் போன்றவற்றை வடிவமைத்து பொருத்தினேன்.

வண்டியின் மேல் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் அமைத்து, ஹைட்ராலிக் பம்ப் மூலம் தண்ணீர் ஏற்றும் நுட்பத்தை மேற்கொண்டேன். வெப்பம் தாக்காமல் இருக்கவும், காற்று சுழற்சி முறையில் சீராக வந்து செல்லவும், ஜன்னல்கள் அமைத்தேன். வீட்டின் மேலுள்ள பிளாட்பார்மில் சேர் போட்டு அமர்ந்து கொள்வதோடு, படுத்து ஓய்வெடுக்கும் வசதியும் செய்துள்ளேன். வீட்டின் வெளிச்சத்திற்காக 600 வால்ட் விளக்கு பொருத்தியுள்ளேன். இதை சோலாரில் எரியும்படி பேனல் பொருத்தி உள்ளேன்.

சோலார் பேனல் மூலம் வீட்டிற்கு தேவையான விளக்குகள், மின்விசிறி என்று அனைத்தையும் பயன்படுத்தலாம். நீளம், அகலம், உயரம் என்று அனைத்தும் ஆறடியில் இருக்கும் இந்த வீட்டை உருவாக்க ₹1 லட்சம் தேவைப்பட்டது. சரக்கு ஆட்டோ என்பதால் இதை ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச் செல்லலாம். இந்த வீடு, காலச்சூழலுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வாழும் நாடோடி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்கும். எதிர்காலத்தில் இதை ரெடிமேட் வீடுகளாக உருவாக்கி, அரசு அனுமதி பெற்று விற்கவும் திட்டமிட்டுள்ளேன்.  இவ்வாறு அருண்பிரபு கூறினார்.


சரக்கு ஆட்டோவில் இதுவே முதல்முறை

முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியதால் இந்த வீட்டை உருவாக்க ₹1 லட்சம் மட்டுமே தேவைப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் சில இடங்களில் கன்டெய்னர் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு ஆட்டோவில் நடமாடும் வீடு அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது அருண்பிரபுவின் பெருமிதம்.

Tags : home ,Goods Auto A ,guy ,Salem , Salem,Goods Auto,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு