×

சேலம் அரசு மருத்துவமனைக்கு கைதிகள் வழங்க இருந்த பிரட்டுக்கு திடீர் முட்டுக்கட்டை

*டெண்டரில் பங்கேற்குமாறு அதிகாரிகள் கைவிரிப்பு

சேலம் :  சேலம் மத்திய சிறை கைதிகள் தயாரித்து அரசு மருத்துவமனைக்கு வழங்க இருந்த பிரட்டுக்கு திடீரென முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்குமாறு அதிகாரிகள் கைவிரித்துள்ளதால் கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நூறுக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் கைத்தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தொழில்கள் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், அதனை அவர்களின் குடும்பத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

இதன்படி அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.சேலம் மத்திய சிறையில் மருத்துவ மனைகளுக்கு தேவைப்படும் இரும்பு கட்டில்கள் தயாரித்து வழங்கப்படுகிறது. தற்போது பன், பிரட், தேங்காய் பன், பிஸ்கட் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் பிரட்டை சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்க சிறை நிர்வாகம்  நடவடிக்கை எடுத்தது. மருத்துவமனை நிர்வாகிகளும் கைதிகள் தயாரிக்கும் பிரட்டை வாங்கிக் கொள்வதாக உறுதி கொடுத்தனர்.

இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 2 டன் பிரட் வழங்க ஆர்டர் கொடுத்தனர். இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.1.25 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று சிறை அதிகாரிகளோடு, கைதிகளும் குஷி அடைந்தனர். நவம்பர் 1ம்தேதி முதல் பிரட் சப்ளை செய்ய தயாரான நிலையில், சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் திடீரென கையை விரித்தது. சென்னையிலுள்ள உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் ஆர்டர் கொடுத்துவிடுகிறோம் என்றனர். இதனால் அதிகாரிகள் மட்டுமல்லாது கைதிகளும் மனம்உடைந்து போனார்கள்.  டெண்டர் எப்போது நடந்தது என்றே சிறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதையடுத்து சிறை அதிகாரிகள் எப்படியாவது பிரட்டுக்கான ஆர்டரை பெற்றுவிட வேண்டும் என சென்னை அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள், ‘‘எதுவாக இருந்தாலும் டெண்டர் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் எனவும், தற்போது டெண்டர் முடிந்து விட்டதாகவும் இன்னும் 6 மாதத்திற்கு பிறகு டெண்டர் போடுங்கள்’’ என்றும் தெரிவித்துள்ளனர். இது சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தான், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அரசு நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு டெண்டர் மூலம் வரவேண்டும் என்றால்  நியாயமா? தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு இரும்பு கட்டில்களை சேலம் சிறைக்கைதிகள்  தயாரித்து அனுப்புகிறார்கள். இதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கான தொகையை அரசு செலுத்தி விடுகிறது. அதே போல், கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப்பொருட்களை அரசு வாங்கி கொடுத்தால், மருத்துவமனைக்கு நாங்களே பிரட் தயாரித்து வழங்குவோம்,’’ என்றனர்.

Tags : Pratt ,prisoners ,Salem Government Hospital , Prisoners,Salem ,Government Hospital ,Breads
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்