×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் பிரசவத்தில் தாய், சேய் பலி: உறவினர்கள் சாலை மறியல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் பிரசவத்தில் தாய், சேய் பலியானதாக குற்றம் சாட்டி, நேற்று உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீர்த்திகா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து இவர்  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பிரசவத்தின்போது அளித்த மருந்தால், பிறந்த குழந்தைக்கும், தொடர்ந்து கீர்த்திகாவுக்கும் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இதனால் கொதிப்படைந்த உறவினர்கள் டாக்டர்களின் அலட்சியத்தால் தான் தாயும், சேயும் இறந்ததாக குற்றம் சாட்டினர்.

 தொடர்ந்து நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம்  கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகே தாய், சேய் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் கூறுகையில், ‘‘டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. இதனால்தான் தாய், சேய் உயிரிழந்தனர். இரவு நேரப்பணியில் கூடுதல் டாக்டர்களை நியமித்து முறையாக சிகிச்சை அளிக்க  வேண்டும்’’ என்றனர்.  பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண், குழந்தை உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Doctors ,government hospital ,Ramanathapuram , Doctors neglect doctors at Ramanathapuram government hospital
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு