×

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக, ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் 30 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) கூட்டணி வைத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 47 இடங்களை இந்த  கூட்டணி வென்றது. ஜேஎம்எம் 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி ஒரு இடத்தையும் வென்றன.

இதையடுத்து, கூட்டணியின் தலைமைக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த 22ம் தேதியன்று, கவர்னர் துரவுபதி முர்முவை ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு 50  எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தார்.  அதையடுத்து, இன்று மதியம் 2 மணிக்கு ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு கவர்னர் துரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிகளவில் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.  விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி உட்பட 30 தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளனர்.

Tags : Hemant Soren ,Chief Minister ,Jharkhand , Hemant Soren takes oath as Jharkhand state chief minister
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி