×

சோமாலியாவில் லாரி குண்டு தாக்குதலில் 73 பேர் பலி

மொகடிசு: சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய லாரியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 73 பேர் பலியாயினர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று சோமாலியா. கடும் வறுமையில் வாடும் இந்நாட்டின்  தலைநகர் மொகடிசு. இங்கு தீவிரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அடிக்கடி மோதல்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று மொகடிசுவில்  வருமான வரி அலுவலகம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை கொண்டு வந்து வெடிக்கச் செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெடிகுண்டுகள் நாலாபுறமும் வெடித்து சிதறியதில், வீரர்கள் உட்பட அப்பகுதியில் இருந்த 73 பேர் உடல் சிதறி  இறந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று   அஞ்சப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து மாநகர மேயர் உமர் முகமது கூறிய போது, ``இறந்தவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக  மாணவர்கள். அவர்களில் துருக்கியை சேர்ந்த மாணவர்கள் இருவர்  உயிரிழந்துள்ளனர். நகரின் மக்கள்  நடமாட்டம் மிகுந்த வருமான வரி கட்டிட  அலுவலகப் பகுதியில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி அருகே தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலினால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக போர் களம்  போன்று காட்சியளித்தது’’ என்று  தெரிவித்தார். அல்கொய்தாவுடன்  தொடர்புடைய அல்-ஷபாப் என்னும் தீவிரவாத இயக்கம் இத்தாக்குதலை நடத்தி  இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.


Tags : Somalia ,lorry bombing , 73 killed in lorry bombing in Somalia
× RELATED கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது