×

குத்துச்சண்டை தகுதிப்போட்டி: ஜரீனை வீழ்த்தினார் மேரிகோம்

புதுடெல்லி: ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கான வீராங்கனையை தேர்வு செய்யும் தகுதிப் போட்டியில் இளம் வீராங்கனை நிகாத் ஜரீனை எளிதில் வீழ்த்தினார் மேரிகோம். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதான குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். சீனப்போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய  கடந்த 2 நாட்களாக புதுடெல்லியில் தகுதிப்போட்டிகள் நடந்தன.

 அதன் 51கிலோ எடை பிரிவில் மேரி கோம், நிகாத் ஜரீன் இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.  இருவரும் நேற்று நடந்த  இறுதிப் போட்டியில் மோதினர். அதில் ஆரம்பம் முதலே  மேரி கோமின் கையே ஓங்கியிருந்தது. அதனால் முடிவில் 9-1 என்ற புள்ளி கணக்கில் எளிதாக ஜரீனை வீழ்த்தினார் மேரிகோம். இந்த முடிவு மூலம் இந்தியா  சார்பில் மேரி கோம்  தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்பார். இதேபோல் குத்துச் சண்டை வீரர்களுக்கான தகுதிப் போட்டிகள் இன்றும் நாளையும் புதுடெல்லியில் நடைபெறும்.

கோமின் கோபத்துக்கு காரணம் என்ன?

‘உலக சாம்பியன் போட்டியில் பதக்கங்கள் வென்றதின் அடிப்படையில் மேரி கோம் நேரடியாக ஒலிம்பி  தகுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்’ என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய்சிங் அறிவித்தார்.  மணிப்பூரை சேர்ந்த மேரி கோம்(36) 6 முறை  உலக சாம்பியன் பட்டமும், ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றவர். திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கூட்டமைப்பின் முடிவுக்கு உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற தெலுங்கானாவை  சேர்ந்த நிகாத் ஜரீன்(23) எதிர்ப்பு  தெரிவித்தார். ‘தகுதிப்போட்டி வைத்து அதன்மூலம் ஒலிம்பிக்  தகுதிச்சுற்றுக்கு தேர்வு செய்ய வேண்டும். நேரடியாக தேர்வு செய்யக் கூடாது’ என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம்  எழுதினார் ஜரீன். அதனால்தான் இந்த தகுதிப் போட்டி நடந்தது. அதுதான் கோமின் கோபத்துக்கு காரணம்.

சீனியர் செய்வது சரியல்ல

போட்டி முடிந்ததும் கோமை,  கட்டித் தழுவ முயன்றார் ஜரீன். ஆனால்  அதற்கு கோம் இடம் தரவில்லை. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜரீன், ‘முடிவு அறிவிக்கப்பட்டதும் அவரை கட்டித் தழுவ முயன்றேன். ஆனால் அவர்  விலகிச் சென்றது என்னை காயப்படுத்தியது. குத்துச்சண்டை வீராங்கனையாக அவரை மதிக்கிறேன். அவர் சீனியர். மாபெரும் வீராங்கனை. ஆனால் சீனியர்கள் எப்போதும் ஜூனியர்களை மதிக்க வேண்டும்’ என்றார்.

நான் ஏன் செய்ய வேண்டும்

‘போட்டி முடிந்ததும் தழுவ வந்த ஜரீனை ஏன் புறக்கணித்தீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மேரி கோம், ‘நான் ஏன் அவரை தழுவ வேண்டும். பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று விரும்பினால், நாம் மற்றவர்களை மதிக்க  வேண்டும். திறமையை களத்தில்தான் நிரூபிக்க வேண்டும். வெளியில் அல்ல’ என்றார்.

அழுத நிர்வாகிகள் தேற்றிய தலைவர்

ஜரீன் தோற்றதும், அவரது தெலுங்கானா  சங்க நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய்சிங் சமாதானப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய்சிங், ‘தகுதிப்  போட்டி நேர்மையாக நடைபெற்றது. மொத்தம் 10 நீதிபதிகள், ஊடகத்தினர் முன்னிலையில் போட்டி நடந்துள்ளது’ என்றார்.

Tags : Boxing qualifier ,Maricom ,Zarine , Boxing qualifier: Maricom beats Zarine
× RELATED ரூ.12 லட்சம் வாங்கிய விவகாரம்; நடிகை...