×

118 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர குளிர் டெல்லிக்கு ‘ரெட் அலர்ட்’: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

புதுடெல்லி: வட மாநிலங்களிலும், தலைநகர் டெல்லியிலும் அடிக்கும் கடும் குளிரும், பனியும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. டெல்லியில் 118 ஆண்டுகளில் இல்லாத வகையில், 1.9 டிகிரி செல்சியஸ் முதல் 2.4 டிகிரி செல்சியஸ்  வரை கடும் குளிர் நிலவுவதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு கடுமையான பனி நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர்  மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரி செல்சியஸ் இருக்கும். கடைசியாக இங்கு கடந்த 1901ல் அதிகப்பட்ச வெப்பநிலை 17.3 டிகிரி செல்சியசாக இருந்தது. தற்போது, 118 ஆண்டுகளுக்குப் பிறகு இது 13.1 டிகிரி செல்சியசாக  குறைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் மிகவும் குறைந்தப்பட்சமாக 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இதனால், மக்கள் கடும் குளிரால் நடுங்கி ஒடுங்கினர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மிகவும் குறைந்தப்பட்சமாக லோதி சாலை பகுதியில் 1.7 டிகிரி செல்சியசும், சப்தர்ஜங் பகுதியில் 2.4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவியது. மேலும், தேசிய தலைநகர் மண்டலத்தின் டெல்லி, நொய்டா,  காஜியாபாத், குருகிராம் என பல பகுதிகளில் கடந்த 14ம் தேதிக்கு பின், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே நீடிக்கிறது. மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாதபடி, பனியின் தாக்கத்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட  உடல் நலக்குறைவு ஏற்பட்டு குழந்தைகளும், முதியோர்களும் கடும் அவதி அடைந்துள்ளனர். ஸ்வெட்டர், குல்லா அணிந்து வெளியில் புறப்பட்டாலும், குளிர் தேகத்தில் ஊடுருவுவதால், அதற்கும் மேல் கம்பளி போர்வையை சுற்றிக்கொண்டு  மக்கள் செல்கின்றனர்.

பனிமூட்டம் காரணமாக, 24 ரயில்கள் 2-5 மணி நேரம் வரை தாமதமாகின. இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் 4 விமானங்களின் புறப்பாடு பல மணி நேரம் தாமதமானது. பனி மூட்டத்தால் டெல்லியில் தரையிறங்க முடியாத விமானங்கள் திசை  திருப்பப்பட்டன. புத்தாண்டு வரை நிலைமை இது போன்றோ அல்லது இன்னும் கடுமையாகவோ இருக்கக்கூடும் என தெரிவித்த வானிலை மைய மூத்த அதிகாரி குல்தீப் வஸ்தவா, பல ஆண்டுக்குப் பின் டெல்லியில் பனி அபாய எச்சரிக்கை  (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லியை போலவே உபி.யில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. அங்கு மீரட் நகரில் குறைந்தபட்சமாக 1.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

காஷ்மீரில் பனிப்பொழிவால் வீடுகளுக்கு  தண்ணீர் சப்ளை தடை பட்டுள்ளது.  நகர் தால் ஏரி உறைந்து காணப்படுகிறது. லடாக்கின் லே மற்றும் திராஸ் பகுதியில் முறையே மைனஸ் 19.1, மைனஸ் 28.6 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுகிறது. ராஜஸ்தானில் பெதாப்பூரில் மைனஸ் 4 டிகிரி செல்சியசும், மவுன்ட் அபுவில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதே போல, ஒடிசா, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வழக்கத்தை காட்டிலும், மிகக்குறைவான  வெப்பநிலை பதிவாகி உள்ளது.

பனியால் விபத்து இரண்டு பேர் பலி

டெல்லியை ஜெய்ப்பூருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 8ல் அரியானா மாநிலம், ரேவார் அருகே சபன் சவுக் குறுக்கு சந்திப்பில் பனி மூட்டத்தால் பார்வைத் திறன் பாதிப்பால் வாகனங்கள் தாறுமாறாக மோதிக் கொண்டன. இதில்  இடிபாடுகளில் சிக்கி 2 பேர் இறந்தனர்.

Tags : Delhi ,The North , Red Alert for the worst cold weather in 118 years: Heavy snowfall in the North
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...