×

மயிலாப்பூரில் குடிபோதை தகராறில் பயங்கரம்: பிச்சைக்காரர் அடித்துக்கொலை: 2 நண்பர்கள் கைது

சென்னை:சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலை, பிளாட்பாரத்தில் 5 பேர் வசித்து வருகின்றனர். பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு அங்கேயே தூங்குவது அவர்களது வழக்கம். இவர்களில் 3 பேர் கடந்த 20ம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுத்துள்ளனர். பின்னர், 3 பேருக்கும் இடையே மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரம் அடைந்த 2 பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  அதிகாலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இயேசுராஜ் (29), கார்த்திக் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடையாறு பகுதியை சேர்ந்த டாக்டர் ராஜேந்திரன் வீட்டில் கடந்த 15ம் தேதி 30 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வடபழனி பார்த்திபன் (19), சத்யா நகர், பிரபாகரன் (20), கோடம்பாக்கம், சாய்குமார் (21), ஆண்டி மாநகர் நிர்மல்  (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கடலூர் மாவட்டம், நெல்லிகுப்பம், நெசனூர் காலனியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (24) என்பவரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.
அரும்பாக்கம், ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த துணிக்கடை வியாபாரி சத்தியா (32) திருப்பூரை சேர்ந்த தேவராஜ் (38) என்ற மொத்த வியாபாரியிடம் ரூ.60 ஆயிரம் மதிப்பு ஆடைகளை கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் தேவராஜ், துணி  வாங்கிய வகையில் தனக்கு ரூ.4 லட்சம் தர வேண்டும் என்றும் தர மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டி உள்ளார். அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை விசாரித்து வருகின்றனர்.

  குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து ஆழ்வார்பேட்டை மூப்பனார் மேம்பாலத்தில் போஸ்டர் ஒட்டிய மர்ம ஆசாமிகளை தேனாம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
 பனையூர் குப்பத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தண்ணீர் கேட்பதுபோல் நாடகமாடி பாலியல் தொல்லை தந்த அதே பகுதி துரைகண்ணன் (47) என்பவரை கானத்தூர் போலீசார் கைது செய்தனர்.
 மாங்காடு, சார்லஸ் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (42) என்பவரை தாக்கி செல்போனை பறித்த 2 பேரை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.

 சேலம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மொய்தீன்பீவி (27) தவற விட்ட கம்மல், கொலுசு, ₹3000 பணத்தை கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் (26) போலீசில் ஒப்படைத்தார்.
 அரும்பாக்கம் அன்னை சத்யா நகர், 13வது தெருவை சேர்ந்த சரஸ்வதி (44) கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்த மர்ம நபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (40) என்பவர் வாங்கிய ₹2 லட்சத்தை திருப்பி தராததால் அவரை வெட்ட முயன்றதாக எஸ்.ஏ காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பவரை கொடுங்கையூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 அம்பத்தூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்த மீரா (40) நேற்று தெருவில் நடந்து வந்தபோது பைக்கில் வந்த 2 பேர் செயினை பறிக்க முயன்றனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 கொண்டித்தோப்பை சேர்ந்த ஐகோர்ட் வக்கீல் மோகன்பாபு என்பவரை தாக்கிவிட்டு சென்றவர்கள் குறித்து பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

நேபாள இளம்பெண் தற்கொலை

சென்னை: தி.நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நேபாள இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேபாளத்தை சேர்ந்தவர் மோனிஷா (19). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர், தனது கணவர் ஓம்பரிவாருடன் தி.நகர் பகுதி வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம்  தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மோனிஷா தனது கணவர் இல்லாத நேரத்தில் நேற்று தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  மோனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோனிஷாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதாலும், நேபாளத்தை சேர்ந்தவர் என்பதாலும் கிண்டி ஆர்டிஓ காயத்ரி  விசாரித்து வருகிறார்.

Tags : beggars ,Mylapore ,friends , Mylapore drunkenness dispute: beggars beaten: 2 arrested
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...