ராணுவ தளபதி அரசியல் பேசுவது ஆபத்தானது: யெச்சூரி குற்றச்சாட்டு

ஐதராபாத்: ‘`உள்நாட்டு அரசியல் பற்றி நாட்டின் ராணுவ தளபதி பேசுவது மிகவும்  ஆபத்தானது,’’  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்  சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை  திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு  திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில்,  நாளை மறுநாள்  ஓய்வு பெறவிருக்கும் ராணுவ தளபதி பிபின் ராவத், கடந்த  வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, `மக்களை வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்வது நல்ல தலைமை ஆகாது,’ என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக  குற்றம்சாட்டினார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்,  அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாட்டின் ராணுவ தளபதி,  உள்நாட்டு அரசியல் குறித்து கருத்து கூறுவது, அண்டை நாடான பாகிஸ்தானில்  ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் அளவு  அதிகாரம் படைத்ததாக உருவானதை போன்று  இந்தியாவை சீரழிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இந்நிலையில்,  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று ஐதராபாத்தில் அளித்த பேட்டியில், ``போராட்டங்கள் நடத்துவது வன்முறை என்று அரசும் ராணுவ  தளபதியும் குற்றம் சாட்டுகின்றனர்.  

சுதந்திரமடைந்த பின்னர், நாட்டின் ராணுவ  தளபதி ஒருவர் அரசியல் குறித்து பேசுவது, இதுவே  முதல் முறையாகும். இது மிகவும் ஆபத்தானது. இது தொடர்ந்தால், பாகிஸ்தானை  போன்று நமது நாடும் சீர்குலைந்து விடும். நாட்டிற்கும்  அதன்  அரசியலமைப்பிற்கும் இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்து கொண்டு அரசு பரிசீலிக்க  வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக அமைச்சர்களும், அரசும் `ராணுவ தளபதி  தவறாக எதுவும் பேசவில்லை. உள்நாட்டு அரசியலில் அவர்  தலையிடவில்லை’ என்று  நாள்தோறும் பேட்டி அளித்து வருகின்றனர்,’ என்றார்.

Related Stories:

>