×

பாஜ.வின் கொள்கைகளால் அசாம் மீண்டும் வன்முறை பாதைக்கு திரும்பும் அபாயம்: கவுகாத்தி கூட்டத்தில் ராகுல் எச்சரிக்கை

கவுகாத்தி: ‘‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பாஜவின் கொள்கைகளால் அசாமில் மீண்டும் வன்முறைப் பாதை திரும்பி விடுமோ என அச்சப்படுகிறேன்,’’ என கவுகாத்தி பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் கட்சியின் 135வது நிறுவன நாளையொட்டி, நாடு முழுவதும் அக்கட்சி சார்பில் பிரமாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, ‘அரசியலமைப்பை காப்போம்  இந்தியாவை காப்போம்’ என்ற தலைப்பில்  நடந்த இப்பேரணியில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூரில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடந்த பொதுக்கூட்ட பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியதாவது: பாஜ செல்லும் இடமெல்லாம் வெறுப்பை பரப்புகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அசாமிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்படி இருக்கையில், அவர்கள் மீது எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்கிறீர்கள்? மக்களின்  குரலை கேட்க பாஜ ஒருபோதும் விரும்புவதில்லை. வடகிழக்கின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் நசுக்க வேண்டுமென அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களால் உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடியாது.அசாமின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாற்றின் மீது பாஜவோ, ஆர்எஸ்எஸ்.சோ தாக்குதல் தொடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாக்பூரிலிருந்து வந்து அசாமை ஆள முடியாது. அசாமை மண்ணின் மைந்தர்கள்தான் ஆள வேண்டும்.

ஏற்கனவே நான் பலமுறை எச்சரித்துள்ளேன். அசாமில் பாஜ காலடி எடுத்து வைத்தால், அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடும் என்று. அது இப்போது உண்மையாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நான் எங்கு  சென்றாலும் அசாமைத்தான் உதாரணமாக காட்டுவேன். அசாம் மக்கள் பல்வேறு வேற்றுமைகள், வன்முறைகளை கடந்து இன்று ஒன்றுபட்டு, அமைதிக்கு திரும்பி வளர்ச்சியை எட்டி உள்ளனர் என்று பெருமிதத்துடன் கூறுவேன். ஆனால்,  இன்றோ மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜ.வின் குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளால் அசாம் மீண்டும் வன்முறை பாதைக்கு திரும்பி விடுமோ என அச்சப்படுகிறேன்.

வன்முறையும், கோபமும், வெறுப்பும் வளர்ச்சியை தரும் என எண்ணாதீர்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, அசாமின் கலாச்சாரத்தையும், வரலாற்றையும், பாரம்பரியத்தையும் யாராலும் ஒடுக்க முடியாது என்பதை பாஜ  தலைமைக்கு உணர்த்துங்கள். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்தை தொடர்ந்து, அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிரிழந்த கவுகாத்தியின் 10ம் வகுப்பு மாணவன் சாம் சாட்போர்ட் மற்றும் சாய்கயான் பகுதியை சேர்ந்த 17 வயது தீபன்ஜோல் தாஸ்  ஆகியோரின் வீட்டிற்கு ராகுல் காந்தி நேரில் சென்று, அவர்களின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்தார்.

Tags : Assam ,return ,Rahul Assam ,rally ,BJP ,Guwahati , Rahul warns of Guwahati rally in Assam
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்