×

உள்ளாட்சி தேர்தல் பூத் ஏஜென்டாக இருந்த பாமக துணைத்தலைவர் அடித்துக்கொலை உறவினர்கள் சாலை மறியல்: பள்ளிப்பாளையம் அருகே பரபரப்பு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, உள்ளாட்சி தேர்தலில் பூத் ஏஜென்டாக பணியாற்றிய ஒன்றிய பாமக துணை தலைவர், நள்ளிரவில் அடித்து கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த வெப்படை ரங்கனூர் அம்மன் நகரை சேர்ந்தவர் மணிமாறன் (எ) சுரேஷ்(35). பள்ளிபாளையம் ஒன்றிய பாமக துணை தலைவர். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம், எலந்தகொட்டாய் ஊராட்சியில் நடந்த முதல்கட்ட தேர்தலின் போது, பாமக சார்பில் பூத் ஏஜென்டாக பணியாற்றினார். பின்னர்  இரவு 12.15 மணியளவில் சுரேஷிற்கு ஒரு போன் வந்துள்ளது. அதனை எடுத்து பேசிய சுரேஷ், வீட்டில் இருந்து டூவீலரில் புறப்பட்டார். மனைவி கேட்டபோது, நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த பூங்கொடி, இதுகுறித்து வெப்படை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று காலை ரங்கனூர் அருகே காட்டுப்பகுதியில் சுரேஷின் டூவீலர் அனாதையாக நிற்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, குட்டையில் சுரேஷ் பிணமாக கிடந்தார். உடலில் காயங்கள் இருந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிந்து, சுரேஷை கொலை செய்தவர்கள் யார், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுரேஷின் உறவினர்கள் வெப்படை நான்கு ரோடு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். நள்ளிரவில் பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம், பள்ளிபாளையத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.


Tags : Relatives ,vice president ,election ,election booth agent ,Booth , Local election, Booth's agent, beloved vice president, assassinated
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!