நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் தமிழக அரசுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகாக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்மை, தொழில் மற்றும் வணிகம், மனிதவளம், பொது சுகாதாரம், பொது உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் மேம்பாடு, நீதி மற்றும் பொதுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிமக்கள் சார்ந்த நிர்வாகம் ஆகிய 10 துறைகளில் 18 பெரிய மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவை சார்ந்த 50 காரணிகளின் அடிப்படையில் நல்லாட்சிக் குறியீடுகள் மதிப்பிடப் பட்டுள்ளன. இவற்றில் பொது உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், நீதி மற்றும் பொதுப்பாதுகாப்பு ஆகிய இரு துறைகளில் தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 10 துறைகளிலும் சேர்த்து பத்துக்கு 5.62 மதிப்பெண் பெற்று நல்லாட்சிக்கான குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. ஏற்கனவே, உள்ளாட்சித் துறையில் சிறந்த செயல்பாடுகளுக்காக நடப்பாண்டில் 13 விருதுகள் உள்ளிட்ட 99 விருதுகளை தமிழக அரசு இதுவரை வென்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக கிருஷி கர்மான் விருதுகளையும் தமிழக அரசு தொடர்ந்து வென்றெடுத்து வருகிறது. இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Ramadas ,Government of Tamil Nadu , Ramadas congratulations , Government of Tamil Nadu, number one , good governance code
× RELATED 8 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கியது தமிழக அரசு