×

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் செயல்பட தடை: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை உத்தரவு

சென்னை: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் சென்னை முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடும் வகையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளனர். அப்போது, புத்தாண்டு தினத்தன்று டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 வரை நட்சத்திர விடுதிகள் இயங்கலாம். நீச்சல் குளத்தின் மீது எந்தவிதமான கொண்டாட்டங்களிலோ அல்லது  கேளிக்கை விருந்துகளிலோ ஈடுபடக் கூடாது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ஓட்டல்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பிறகுதான் உள்ளே அனுமதிக்க வேண்டும். வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

புத்தாண்டு நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்குகளிலேயே நடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மேடைகள் உறுதியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீச்சல்குளம் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக்கூடாது. ஓட்டல்களில் வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும், சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தக்கூடாது. அதேபோன்று, விடுதிகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் வரக்கூடிய நபர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லும் வரை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மதுவிருந்து கொண்டாட்டங்களில் அனுமதிக்க கூடாது. பெண் விருந்தினர்கள் வந்தால் அவர்களை பெண்களை பவுன்சர்களை வைத்து பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் இருந்தால் அவர்களை விடுதியின் நிர்வாகம் ஓட்டுனர்களை வைத்து காரில் பாதுகாப்போடு அனுப்பி வைக்க வேண்டும்.

மதுபோதையில் கூட்டமாகவோ அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்னைகளில் ஈடுபட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நட்சத்திர விடுதிகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை சிசிடிவி கேமராக்களை வைத்து நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை அனைத்து விடுதி நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டு  புத்தாண்டை மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், நட்சத்திர விடுதிகள் தவிர மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை போன்ற பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு  பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டு தினம் கொண்டாட இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் சென்னையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு போலீசார் 500க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.

பைக்ரேஸ் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 20 போலீஸ் கண்காணிப்பு குழுக்கள், 25க்கும் மேற்பட்ட சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடும் வகையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags : hotels ,New Year's Day ,star hotels , English New Year's Day, star hotels, at 1 pm, are forbidden to operate
× RELATED நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்