×

தனியார் ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், விடுதிகளில் மது விருந்துடன் விபரீதங்களுக்கு வித்திடும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

* ஜோடிக்கு மட்டுமே அனுமதி என்பதால் மோசம் போகும் இளம் சமுதாயம்
* உற்சாக மிகுதியில் எல்லை மீறல்  
* விபத்தில் உயிரிழக்கும் சோகம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் நாளின் நள்ளிரவு நேரம்... அதிர்வேட்டுகள் விண்ணைப் பிளக்க...  அலங்காரங்கள் கண்ணைப்பறிக்க... உற்சாக   குரல்கள் உறுமி கொட்ட...  அடிெயடுத்து வைக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு.... சாதி,  மதங்கள் கடந்து அனைத்து தரப்பினரும் கொண்டாடும் நாளாக புத்தாண்டு  இருக்கிறது. இதனை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடும் வழக்கம் தற்போது  மேலோங்கியுள்ளது.  வண்ண வண்ண வாண வேடிக்கை, பாட்டு,  நடனம், பல்சுவை நிகழ்ச்சிகளுடன் இரவு விருந்து என நகரங்கள் களை கட்டுகிறது. தமிழகத்தில்  கடந்த சில ஆண்டுகளாக ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளில்  புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடக்கிறது. அதிலும், சென்னை,  கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற பெருநகரங்களில் இருக்கும் பெரிய  ஹோட்டல்களில் வெளி நாட்டு அழகிகள், சினிமா நடிகைகளின் நடனம்  களை கட்டுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹோட்டல்கள், கிழக்கு  கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகளில் மது விருந்துடன் கூடிய  புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்கிறது. இதுபோக சென்னை மெரினாவில் அன்றைய தினம்  இரவு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்து புத்தாண்டை  கொண்டாடுகின்றனர். இதுபோலவே மதுரை, கோவை, சேலம், திருச்சி நகரங்களிலும் பஸ்  ஸ்டாண்ட், மைதானங்களில் மக்கள் கூடிநின்று, புத்தாண்டை விழாவாக  கொண்டாடுகிறார்கள்.

இந்த கொண்டாட்டத்தில், வாழ்த்துக்கள் தெரிவிக்கும்  பழக்கம் மட்டுமின்றி, இளசுகளுக்கு புதிய பழக்கங்களும் ஏற்பட்டு விடுகிறது  என்றால், அதனை மறுக்க இயலாது. சின்னஞ்சிறு வயதில், மது பழக்கத்தை  ஆரம்பிக்கும் இடமாக இந்த புத்தாண்டு கொண்டாட்டம் மாறி வருகிறது. மது  போதையில் திளைக்கும் இளசுகளை கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு பார்க்க  முடிகிறது. போதை தலைக்கேறிய நிலையில், நட்சத்திர ஹோட்டல்களில் பல பெண்கள்  தங்களின் வாழ்க்கையையே தொலைக்கின்றனர். நண்பர்களுடன் புத்தாண்டு  விருந்து என வீட்டில் கூறிக் கொண்டு வெளியே செல்லும் சில கல்லூரி  மாணவிகளும், தவறான பழக்கத்தால் விபரீதத்தை சந்திக்கின்றனர். தனியார் ஹோட்டல்கள், பண்ணை  வீடுகள், விடுதிகளின் நிர்வாகம் பணம் சம்பாதிக்கும் நோக்கில், புத்தாண்டு  கொண்டாட்டத்தின் புக்கிங்கை கடந்த 4 மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டன.  இதில், ஒரு சில ஹோட்டல்களில்  ஜோடிகளுக்கு  மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  காவல்துறை என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், அங்கு விதிமுறைகள்  மீறப்பட்டு பல விபரீத சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டுதான்  இருக்கிறது.

இப்படி மது போதை கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும்,  மற்றொரு புறத்தில் சாகச கொண்டாட்டத்தை புத்தாண்டு தினத்தில் இளைஞர்கள்  நிகழ்த்துகிறார்கள். இது அவர்களின் உயிரையும் பறித்துக் கொள்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு புதிய ஆண்டு பிறந்தவுடன், தங்களின் பைக்கில் வீலிங்  செய்துகொண்டும், சாலையில் ஸ்டாண்டை உரச விட்டு நெருப்பை கக்க வைத்துக்  கொண்டு செல்லும் இளைஞர்களும் இருக்கிறார்கள். சென்னை நகரில்  மட்டும் இத்தகைய சம்பவங்கள் நடந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சேலம்,  கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களின் சாலைகளிலும் இத்தகைய ரேஸ்  சம்பவங்கள் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  மது போதையில் பைக், கார்களில் சென்று விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள்,  மாநிலம் முழுவதும் 500க்கும் அதிகமாக நடக்கிறது. இந்த விபத்துகளில் 15  பேராவது தங்களது உயிரை காவு கொடுக்கின்றனர்.

கை, கால், உடலில் பல இடங்களில்  காயங்களுடன் உயிர் தப்பும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும்  அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் விபத்தில்  சிக்கி காயமடைந்துள்ளனர். புதிய ஆண்டில் ஆனந்தமாக இனிப்பு  கொடுத்து, கொண்டாடும் விழா தற்போது விபரீதத்தை தரும் விழாவாக மாறி வருவது  வேதனையை தான் தருகிறது. இதனை தவிர்க்க போலீசார் கடும் எச்சரிக்கையுடன்  கூடிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத  ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இளம்பெண்கள், தங்களிடம்  யாரும் எல்லை மீறாத வகையில் புத்தாண்டை கொண்டாடி மகிழ வேண்டும். அதற்காக  பெற்றோர் உடன் செல்வது மிகவும் முக்கியம். இவை அனைத்தும் நடந்தால் தான்,  விபரீதங்கள்  இல்லாத, அர்த்தமுள்ள  புத்தாண்டாக  2020ம் ஆண்டு  பிறக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....

கட்டுப்பாடு என்ன?

* ஹோட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை நள்ளிரவு 1 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்திற்கு பின், எந்த இடத்திலும் கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது.
* ஹோட்டல், பண்ணை வீடு, விடுதிகளில் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு, மூடி வைக்க வேண்டும். அதன் மீது மேடை அமைக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மது மயக்கத்தில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பப்பட்டவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மதுவை விற்பனை செய்ய வேண்டும். மது அருந்திய நபர்கள் வாகனம் ஓட்டக்கூடாது.
* நட்சத்திர விடுதிகளில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திருக்க வேண்டும்.
* நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மதுபானங்களை பறிமாறக்கூடாது. ஆபாசமான நிகழ்ச்சிகள் எதுவும் இருக்கக்கூடாது.
* பெண்களிடம் அத்துமீறி நடக்கும் நபர்களை விடுதி நிர்வாகம் உடனே வெளியேற்ற வேண்டும்.
* சாலையில் பைக்கில் செல்லும் போது, ரேஸ், வீலிங் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பைக் ஸ்டாண்ட் அல்லது வேறு இரும்பு கம்பியை சாலையில் உரசியபடி செல்லக்கூடாது.மது குடித்துவிட்டு பைக் ஓட்டினால், லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
* மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பிறர் மீது வண்ணப்பொடி, கலர் கரைசலை தெளிக்கக்கூடாது.

500 ஆண்டுகளாக  பின் பற்றும் புத்தாண்டு

ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக, சுமார் 500 வருடங்களாக  பின்பற்றி வருகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மெசபடோனியர்கள், மார்ச் 25ம் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25ம் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது என்பது வரலாற்று ஆய்வுகள்
கூறும் தகவல்.

காலண்டர் பிறந்த கதை

புத்தாண்டில் ஒவ்வொருவரும் காலண்டர்  வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே,  இந்த காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதை  உருவாக்க காரணமாக இருந்தவர் 13ம்போப்கிரிகோரி. 1582ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த  ஜூலியன் கா லண்டரை, இவர்  ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு முறை,  லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் என்று முடிவு செய்தார். 365 நாட்களையும் 12 மாதங்களுக்குள் மிகச்சரியாக அடக்கினார். இதையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.

கடந்தாண்டில் 13 உயிர்கள் பலி

கடந்த புத்தாண்டு தினத்தில் மது போதையில் அதிவேகத்தில் சென்றவர்கள், பைக்கில் சாகசம் செய்தவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றவர்கள், தகராறில் ஈடுபட்டு தாக்கப்பட்டவர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். போலீசார் அதிகளவு ரோந்து பணியிலும், தடுப்பு அமைத்தும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ‘அதிவேமாக பைக்கில் செல்ல கூடாது என  எமதர்மன் வேடமிட்டு விழிப்புணர்வு  ஏற்படுத்தினோம். ஆனாலும்  அதையெல்லாம்  யாரும் பொருட்படுத்துவது இல்லை. விலையுர்ந்த பைக்குககளில் அசுர வேகத்தில் சென்று விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடுகின்றனர்’ என்பது போக்குவரத்து ஆர்வலர்களின் வேதனை.

போதையில் மெய் மறப்பு விபத்தால் உணர்விழப்பு

புத்தாண்டு  தினத்தில், மக்கள் கூடும் இடங்களில் அவர்களின் கவனத்தை ஈர்க்க  பைக்கில் சாகசம் செய்வதால் உயிர்ப்பலி  ஏற்படுகிறது. மது போதையில் சந்தோஷம்  என்ற பெயரில் மெய்மறக்கும் இளைஞர்கள்,  போக்குவரத்து விதிகளை மீறி விபத்தில் சி்க்கும் போது  உணர்வுகளை இழந்து விடுகின்றனர் என்பது வேதனை. 100 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில்  பறந்தால், அடுத்த சில நொடிகளில் 108  ஆம்புலன்சில்  செல்ல வேண்டி வரும் என்பதை சாகசம் காட்டும் இளைஞர்கள் உணரவேண்டும்.

Tags : Hotels ,Farm Houses ,New Year's Eve Celebrations ,Wine Party ,Hostels , New Year's Eve Celebrations , Wine Party,Private Hotels, Farm Houses and Hostels
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்