×

மணல் கடத்தல் லாரிக்கு பை, பை சொல்லும் ஸ்பெஷல் டீம்

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தலுக்கு குறைவு இல்லை. டாரஸ் லாரிகள் கனிம பொருட்களை ஏற்றிக்கொண்டு பறக்கின்றன. இவற்றை பிடிக்க காவல்துறை சார்பில் ‘ஸ்பெஷல் டீம்’ ஒன்று மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மணல், கனிம பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோரை பிடிக்க வேண்டியது இவர்களது பணி. ஆனால் அதிகாரிகள் செங்கல் சூளைக்கு மண் எடுப்போர், வீட்டிற்கு பவுண்டேஷனுக்கு மண் கொண்டு செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து கணக்கு காண்பித்து வருகின்றனர். கேரளாவுக்கு எம்-சாண்ட் ஓவர் லோடுடன் செல்கின்ற சில டாரஸ் லாரிகளை சாலையில் கண்டதும் ‘ஸ்பெஷல் டீம்’ கண்களை மூடிக்கொள்வது வழக்கம். அதிலும் தமிழ் கடவுளின் பெயர் கொண்ட ஒரு குரூப் டாரஸ் லாரிகளை கண்டால் அந்த பக்கத்தில் கூட இவர்கள் திரும்புவது இல்லை. ஏனெனில் அவர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனிக்கும் விதம் சூப்பராம். மேல்மட்டம் வரை கடத்தல் கும்பல் செல்வாக்கு விரிந்துள்ளது.

அதுபோல் குழித்துறை ஆற்றில் இருந்து வள்ளங்களில் மணல் அள்ளி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. முன்பு பத்மநாபபுரம் ஆர்டிஓவாக ஜோதிநிர்மலா இருந்தபோது ஆற்றில் மணல் கடத்துவோருக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் அபாரம். மூழ்கடிக்கப்பட்ட படகுகளையும் வெளியே இழுத்துவந்து நொறுக்கினார். இப்போது போலீசார் சிலரே மணல் கடத்தல் வாகனத்திற்கு ‘எஸ்கார்டாக’ செல்கின்ற அவலமும், பை, பை என டாட்டா காட்டும் நிலையும் இங்கு உள்ளது என்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் மணல் அள்ளுவதும், கேரளாவுக்கு கடத்துவதும், பின்னர் படகுகளை ஆற்றிலேயே மூழ்கடித்துவிடுவதும் கனகச்சிதமாக நடக்கிறது. மணல் கடத்தல் கும்பலின் கொட்டத்தை அடக்க வருவாய்துறை கண் திறந்தால் சிறப்பு.

தூத்துக்குடியை கலக்கும் சென்னை ‘ராஜா’


தூத்துக்குடி மாவட்டமே அதிக மழையால் ‘குளமாகிக்’ கிடக்கிறது. இந்த குளத்திலும் சென்னையில் இருந்து புதிதாக வந்துள்ள அதிகாரி கறாராக மீன் பிடிக்கிறாராம். ராஜா போன்று வலம் வரும் இவர் சாதாரண விபத்து வழக்கில் கூட ₹3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கல்லா கட்டுகிறார். ஒரு விபத்து வழக்கில் சிக்கிய நபரிடம் 5 ஆயிரம் கேட்க, அவரோ விஷயத்தை லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொண்டு செல்வேன் என்று பகிரங்கமாக கூறினாராம். மயிரிழையில் தப்பிய அந்த இரண்டு நட்சத்திர அதிகாரி தற்போது காம்பவுண்ட் சுவர் என்ற பெயரில் வசூல் வேட்டையை துவக்கியுள்ளாராம். இதற்காக 15 லட்சம் நிர்ணயித்துள்ள அந்த அதிகாரி முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள் துவங்கி ரோட்டோரமாக மீன் விற்பவர்கள் வரையில் வலை விரித்துள்ளார். உயர் அதிகாரி இல்லாத நிலையில் இந்த அதிகாரியின் கொட்டம் அந்த ஏரியாவை கலங்கடிக்குதாம். இந்த தகவல் அங்கிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள எஸ்பி அலுவலகத்தை மட்டும் இன்னும் எட்டவே இல்லையாம்.

தனிப்படையை புரட்டி எடுத்த ‘எஸ்பி’


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் நீராவி முருகன் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளன. இவன் வெளி மாவட்டங்களிலும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். இந்த வரிசையில் ஈரோடு மாவட்டத்தில் 100 பவுனுக்கு மேல் கொள்ளையடித்து விட்டு நெல்லை மாவட்டம், வள்ளியூரில் வீடு எடுத்து தங்கியிருந்தான். இதை அறிந்த ஈரோடு தனிப்படையினர் இரவோடு இரவாக அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பல் உஷாராகி காரில் தப்பிக்க காரை சேசிங் செய்து கார் கண்ணாடியையும், டயரையும் ஈரோடு தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். நெல்லை மாவட்டத்திலும் பல கொள்ளைகளில் நீராவிக்கு தொடர்பு உள்ளதாம். ஈரோடு தனிப்படை நீராவியை அள்ளிச் சென்ற விவரம் தெரியவந்ததும் கொதிப்படைந்த நெல்லை எஸ்பி உள்ளூர் தனிப்படையை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். இதனால் தனிப்படை போலீசார் ஆடிப் போய் உள்ளனர்.

காசு மேலே காசு பார்க்கும் இன்ஸ்...,!

கோவை புறநகர் காவல்நிலையத்தில் தங்கமான பெயர்கொண்ட த்ரி ஸ்டார் அதிகாரி ஒருவர் பணி புரிகிறார். இவர், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவர். இக்காவல் நிலையத்துக்கு, எந்த புகார் மனு வந்தாலும், வழக்கு பதிவுசெய்வதே இல்லையாம். பேரம் பேசி, காசு பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறாராம். இக்காவல் நிலைய எல்லைக்குள், பல தற்கொலை வழக்கு, இயற்கை மரணமாக மாறியிருக்கிறது. பல மர்மச்சாவு, தற்கொலை வழக்காக மாறியிருக்கிறது. எல்லாம் அந்த நோட்டுதான் காரணம். ‘’சும்மாவா சொன்னாங்க... பணம் பாதாளம் வரை பாயும்னு....’’

என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். இக்காவல் நிலைய எல்லைக்குள், 3 நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை, விபசார தொழில் என பல்வேறு சட்ட விரோத செயல் தலைவிரித்தாடுகிறது. இதையெல்லாம் இந்த அதிகாரி கண்டுகொள்வதில்லை. அதற்கு நேரமும் இல்லை. காரணம், அவர்கள், இவரை கண்டுகொள்கிறார்கள். ‘‘சார், இப்படியே போனா... விஜிலென்ஸ்... அது... இது... என ஏதாச்சும் கொண்டுவந்து, சிக்கல்ல மாட்டிவிட்டுருவாங்க... கவனமா இருங்க சார்....’’ என நலன் விரும்பிகள் அறிவுரை சொன்னால், ‘‘அட, போப்பா.... நாம பார்க்காத அதிகாரியா? வந்தா பாத்துக்கலாம்...., சர்வீஸ் இருக்கும்வரை பாக்கெட் நெறைஞ்சா போதும்...’’ என்கிறார் சர்வ சாதாரணமாக.

மாமூலில் குளிக்கும் மதுவிலக்கு போலீசார்


தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸ் பிரிவு உத்தமபாளையம் மற்றும் தேனியில் செயல்படுகிறது. இதில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐகள் உள்ளனர். இவர்களின் முக்கியப் பணியே திருட்டுத்தனமாக நடக்கும் மது விற்பனையை தடுத்தல், பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநில சரக்கு விற்பனையை தடுத்தல், தனியார் நடத்தும் பார்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் மூடுகின்றனரா, தமிழக - கேரள எல்லைகளில் கள்ள மது காய்ச்சப்படுகிறதா என்பதை கவனிப்பதுதான். ஆனால், மாவட்டத்தில் தங்களுக்கான இந்த எந்த பணிகளையும் இவர்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பார்களில் சில்லரை மது விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து வரும் மது பாட்டில்களை, ‘டூவீலர்களில்’ வைத்து மாவட்டம் முழுக்க விற்பனை செய்கின்றனர். மிலிட்டரி கேண்டீன் சரக்குகளும் தாராளமாக கிடைக்கிறது. பெயரளவில் கூட இதனை மதுவிலக்கு போலீசார் தடுப்பதில்லையாம். இதற்கு காரணம், போலீசாரை ‘மாமூலில்’ குளிப்பாட்டுவதுதான் என்கிறார்கள். தேனி எஸ்பி தலையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன், இவர்களுடன் தொடர்பில் இருக்கிற திருட்டு மது விற்பனையாளர்களின் பட்டியலைச் சேகரித்து, அவர்களையும் அடக்க வேண்டும் என்பதுதான் பொதுஜனத்தின் வேண்டுகோள்.

Tags : Bye ,Special Team , Special Team to say, Bye, sand smuggling truck
× RELATED வயநாட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்...