×

குடிமகன்களை மிரட்டி மதுபாட்டில்களை ஏட்டுகள் சுவாகா

மலைக்கோட்டை புறநகர் பகுதியில் கரூர் சாலையில் ஜீயான காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட  டாஸ்மாக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேல் சரக்கு வாங்கி செல்லும் குடிமகன்களை வழிமறித்து சரக்குகளை பறிமுதல் செய்து வரும் இரு ஏட்டுகளை கண்டால் குடிமகன்கள் வெலவெலத்து போகின்றனர். நாங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று குடித்து கொள்கிறோம் என்றாலும் விடாமல் மிரட்டி மதுபாட்டில்களை பறிக்கின்றனர். இதுகுறித்து மற்ற காவலர்களுக்கு தெரிந்தும் நமக்கு ஏன் வம்பு என மவுனியாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வாகன சோதனை என்ற பெயரில் சிக்கிய 7 பெட்டிகளில் 336 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த ஏட்டுக்கள், காவல் நிலையத்தில் கணக்கு காட்டும் போது 180 பாட்டில்களை மட்டும் காட்டியுள்ளனர். மீதமுள்ள 156 பாட்டில்களை பதுக்கி மீண்டும் டாஸ்மாக்கில் விற்று பணம் பார்த்துள்ளனர். இதில் இவர்களிடம் சிக்கி மதுபாட்டில்களை இழந்தவர்கள் புலம்பி தீர்த்துள்ளனர். மேலும் இரட்டை தலை ஏட்டுகளான கீர்த்தியானவர், விஜயமானவர்களின் லீலைகள் குறித்து சரக டிஎஸ்பிக்கு தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏனோ புரியவில்லை என குடிமகன்கள் மட்டுமின்றி சக காக்கிகளும் தலை கிறுகிறுத்து நிற்கின்றனர்.

காதல் ஜோடிகளும், காவல் நிலையமும்

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் நிலையம் காதல் ஜோடிகளால் உச்சக்கட்ட உஷ்ணமாக மாறியுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் உதவியாளர் ஒருவருக்கு திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் அவரது மனைவியை வாலிபர் ஒருவர் வீட்டிற்கே வந்து கடத்தி சென்றுவிட்டார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடத்தி சென்ற வாலிபரின் தந்தை அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ள அவரது இறுதிசடங்கிற்கு கூட மகன் வரவில்லை. எப்போது வந்தாலும் வெட்டுவேன் என்று அந்த பெண்ணின் தந்தை கோபத்துடன் இருந்து வருகிறார். போலீசாரோ பெண்ணை மீட்கவோ, கடத்தல் வழக்குபதிவு செய்யவோ முன்வரவில்லை.

இந்த பிரச்னை அடங்குவதற்குள் கல்லூரி மாணவியை காதலித்து வாலிபர் ஒருவர் அழைத்து சென்றார். அவரது பெற்றோர் அதே வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க போலீசார் மாணவியை தேடினர். அப்போது காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று போலீசார் எச்சரிக்க, விசாரணைக்காக வந்த காதலனை காவல்நிலையம் முன்பே 20 பேருடன் வந்து தாக்கிய பெண்ணின் பெற்றோர் மாணவியை அழைத்து சென்றுவிட்டனர். மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக காதலன் புகார் அளிக்க சாதாரண பிரிவில் வழக்குபதிந்து, மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மனைவியை பறிகொடுத்தவர்களுக்கு காவல் நிலையமும் ‘டாடா’ காட்டுவதால் அவர்கள் வேதனையில் உள்ளனர்.

ஆளுங்கட்சியின்னா கமுக்கம் எதிர்க்கட்சியின்னா அழுத்தம்

அதியமான் கோட்டை மாவட்டத்தின் முக்கிய பகுதி இன்ஸ்பெக்டருக்கு சட்டம் ஒழுங்கு எல்லாம் ஒரு பிரச்னையே இல்லையாம். ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  யாராவது பேனர் வைத்தால் போதும், உடனடியாக மீசையை முறுக்கி விட்டு கேஸ் பைல் செய்கிறாராம். சில மாதங்களுக்கு முன்பு, திருமண வரவேற்பு  பேனர்  வைத்ததற்காக மணமக்கள் மீதே வழக்குப்பதிவு செய்து கிலி காட்டினாராம்.ஆனால் ஆளுங்கட்சி வைக்கும் ராட்சத பேனர் எதுவுமே அய்யாவின் கண்ணுக்கு தெரியாதாம். இதில் பாதிக்கப்பட்ட கட்சி பிரமுகர் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, அவரது ஸ்டேஷனுக்கே போய் அனுமதி கேட்டாராம். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாம். இதனால் கோர்ட்டுக்கு போகலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் அவர்.

சிசிடிவி கேமராவால் எஸ்ஐக்கு வந்தது சிக்கல்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தொழிலதிபர் ராமு சொத்து பிரச்னையில் கொலை செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது முதல் மனைவி, முன்னாள் சபாநாயகர் என தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வந்தது. இதில் ராமுவின் 2வது மனைவி எழிலரசி, ராமு சாவுக்கு காரணமானவர்களை பழிதீர்த்து வருகிறார்.இந்த விவகாரத்தில் திருப்பட்டினம் எஸ்ஐக்கும் தொடர்பிருப்பதாக கூறி காவல்துறை தலைவருக்கு புகாரை தட்டிவிட்டுள்ளனராம். ஆதாரமாக ராமுவின் வீட்டு சிசிடிவி கேமராவின் இணைப்பு எஸ்ஐ செல்போனில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதைவைத்தே குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். கொலையாளிகள் பதுங்கியிருந்தபோது கூட உதவி இன்சுக்கு தெரியாமல் ரைடு நடந்ததாம். இதையெல்லாம் டிஜிபியின் இமெயிலுக்கும் பறக்கவிட்டுள்ளனராம்.

Tags : Citizens , Intimidating citizens, Liquor Aids Chuvaka
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...