360 டிகிரி கோணத்தில் 67 கோயில்களை பார்க்கும் வசதி : அறநிலையத்துறை தகவல்

சென்னை: 360 டிகிரி கோணத்தில் நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாக 67 கோயில்களை இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில், கோயில்களில் முழு வடிவமைப்பையும் இணையதள வழியாக பார்க்கும் வகையில் இணைய சுற்றுலா சேவை ஒன்றை தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்தது. முதற்கட்டமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உட்பட 10 கோயில்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படங்கள் ஒவ்வொரு ேகாயிலை பற்றிய முழுவிவரங்கள் இணையதளத்தில் உள்ளன. இதில் உள்ள காட்சிகளை 360 டிகிரி கோணத்தில் நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாக காணலாம்.

கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை பெரிதுப்படுத்தி பார்த்து கொள்ள முடியும். இந்த இணைய சுற்றுலா சேவைக்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து மற்ற கோயில்களில் இணைய சுற்றுலா சேவையில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், வேதாரண்யம் வேதாரண்யேசுவர சுவாமி கோயில், விருத்தச்சாலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நெல்லையப்பர் கோயில், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் உட்பட 67 கோயில்கள் இணைய சுற்றுலா சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கோயில்களில் கோபுரம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் முழுவதையும் மக்கள் வீட்டில் இருந்தே 360 டிகிரி கோணத்தில் கண்டுகளிக்க முடியும். இந்த வசதியை www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பார்க்க முடியும். இந்த வசதி மேலும் 100 கோயில்கள் விரைவில் இடம் பெற உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>