×

அருமனை அருகே புதைக்கப்பட்ட ராணுவ வீரர் உடல் மீண்டும் தோண்டி எடுப்பு: உடல் பாகங்கள் சிக்கியது?

அருமனை: குமரி  மாவட்டம், அருமனை அருகே தேமானூர் ஆற்றுப்பாலத்தின் அடிப்பகுதியில், சுமார்  10 வருடங்களுக்கு முன் 65 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது.  அருமனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின், அருமனையை அடுத்த புண்ணியம் பகுதியில் அடக்கம் செய்தனர். இந்தநிலையில்  கடந்த 6 மாதங்களுக்கு முன், கேரளாவில் வினு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் பாறசாலை ஆரையூர் பகுதியை சேர்ந்த சாஜி, அபிலாஷ் ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சாஜி  தனது தந்தையான முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணனை, தனது நண்பர்கள் அபிலாஷ், வினு ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை அருமனை பகுதி ஆற்றில் வீசியுள்ளனர். இந்நிலையில் வினு இந்த விவகாரத்தை போலீசிடம்  தெரிவிப்பேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த சாஜி, அபிலாஷ்  உள்பட 4 பேர் சேர்ந்து வினுவை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி பாறசாலை இன்ஸ்பெக்டர்  ராஜகுமார் தலைமையில் போலீசார் அருமனை வந்தனர். பின்னர் புண்ணியம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணன் உடலை தோண்டி எடுக்கும் பணி  நடந்தது. ஆனால் அப்போது உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் இன்று பாறசாலை இன்ஸ்பெக்டர் ரியாஸ் தலைமையில் போலீசார் அருமனை வந்து, மீண்டும் கிருஷ்ணன் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டும் பணி நடந்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு உடல் பாகங்கள் கிடைத்தது. இதையடுத்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தடயவியல் துறை டாக்டர் சசிகலா உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவை திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு டிஎன்ஏ பரிசோதனை முடிந்த பிறகே அது கிருஷ்ணன் உடல் பாகம்தானா என்பது உறுதியாக தெரியவரும். அருமனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Soldier ,Arauman ,Body Parts , Awesome, buried soldier, body, digging
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!