×

ஈரோட்டில் மாலையுடன் வாக்களித்த புதுமண தம்பதி

ஈரோடு: ஈரோடு அருகே லக்காபுரம் ஊராட்சிக்கு நேற்று தேர்தல் நடந்த நிலையில் ஜனநாயக கடமையாற்ற திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் கழுத்தில் மாலையுடன் வந்து புதுமண தம்பதி தங்களது வாக்கை பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் கிழக்குவலவு பகுதியைச் சேர்ந்தவர் ரினோடிக்லுஸ் (28). இவர், பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், நிகிதா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நிகிதா திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரின் திருமணம் நேற்று ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்தது. திருமணம் முடிந்ததும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. புதுமண தம்பதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நேரத்தில் மணமகன் ரினோடிக்லுஸ்க்கு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் லக்காபுரம் பஞ்சாயத்தில் வாக்கு இருந்தது. நேற்று லக்காபுரம் ஊராட்சிக்கு தேர்தல் நடந்ததால் மாலை வரை வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த ரினோடிக்லுஸ், பின்னர் மணமகள் நிகிதாவுடன் கழுத்தில் மாலையுடன் லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார்.

மணமகள் நிகிதாவை வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே நிற்க வைத்து விட்டு உள்ளே சென்ற ரினோடிக்லுஸ் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். திருமணம் நடந்த சில மணி நேரத்தில் தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்ற கழுத்தில் மாலையுடன் வந்த புதுமண தம்பதிகளை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

Tags : Erode , Erode, a novelty couple
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...