×

குடியுரிமை சட்டம் தொடர்பாக ராணுவ தளபதி கருத்து: அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல; ப.சிதம்பரம் பேச்சு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். நாட்டின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை, போலீசாரின் துப்பாக்கிச்சூடு காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிபின் ராவத், குடியுரிமை சட்டம் தொடர்பாக முதல் முறையாக கருத்து தெரிவித்து பேசியதாவது: தலைமைத்துவத்தின் சிக்கலான விஷயம், எல்லாவற்றையும் வழிநடத்தி செல்வதுதான். ஏனெனில் நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, அனைவரும் உங்களை பின்பற்றுவார்கள். அது அவ்வளவு எளிதல்ல. ஒரு தலைவன் சரியான பாதையில் மக்களை வழிநடத்துபவனாக இருக்க வேண்டும். ஒருபோதும் தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடாது. கூட்டத்தினர் இடையே திடீர் தலைவர்கள் தோன்றுவதை நீங்கள் காணலாம். தற்போது பல பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களை சிலர் தலைமை ஏற்று, வன்முறை மற்றும் கலவரங்களை நோக்கி வழிநடத்திச் செல்கிறார்கள். இது நல்ல தலைமை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக, ராணுவத்தின் தலைமை பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற உள்நாட்டு விவகாரங்கள் குறித்து தகவல் தெரிவிப்பது வழக்கமல்ல. ஆனால், முதல் முறையாக உள்நாட்டு பிரச்னை குறித்து ராணுவ தலைமை தளபதியே பேசியிருப்பது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. வரும் 31ம் தேதியுடன் பிபின் ராவத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. பின்னர் அவர், புதிதாக உருவாக்கப்படும் முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 134வது நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்  பேரணி மற்றம் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். எப்போது; அரசை ஆதரிக்கும் வகையில் பேசும்படி டி.ஜி.பி. மற்றும் ராணுவ தளபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்பது ஓர் அவமானம். ராணுவ தளபதி ராவத்திடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் ராணுவ தலைமை தளபதியாக இருக்கிறீர்கள். உங்களது வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர்கள் செய்திடுவார்கள்.

நீங்கள் எப்படி போரிட வேண்டும் என்று கூறுவது எங்கள் வேலையல்ல என்பதுபோல், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு கூறுவது ராணுவத்தினரின் பணியல்ல. நீங்கள் உங்களது ஆலோசனையின் படி போரிடுங்கள். நாட்டின் அரசியலை நாங்கள் கவனித்து கொள்வோம் என்று கூறினார். மேலும் பேசிய அவர்; குடியுரிமை சட்டத்தில் எல்லாமே தவறாக உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத அமித்ஷா ராகுலை விவாதத்திற்கு அழைப்பதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை, மாநிலங்களவையில் நடந்த விவாதங்களை அமித்ஷா முதலில் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.


Tags : Commander ,army commander ,Citizenship Law on Army ,politicians , Citizenship Act, Army Commander, P. Chidambaram
× RELATED கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு