×

அரவக்குறிச்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்வதால் அதலபாதாளத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் சென்ற அவல நிலை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களின் சுற்றுப் பகுதியில் கிணறுகள் வீடுகள், தோட்டங்கள் என்று 10 ஆயிரத்திற்கும் மேல் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. கடும் வறட்சி மற்றும் மழை இல்லாத காரணத்தால் ஆழ்குழாய் கிணறு, விவசாயக் கிணறு என்று நீர் நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் வரும் கோடை மாதத்தில் அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டுகள் போல பொதுமக்கள் தண்ணீருக்கு தவித்து முதியவர்கள், பெண்கள் என இரவு பகல் என்றில்லாமல் தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி செல்லும் பரிதாபமான சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் 150 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தாலே தண்ணீர் வந்து விடும்.

ஆனால் தற்போது 900 அடி ஆழம் வரை ஆழப்படுத்தப்படுகின்றது. மிகச் சில இடங்களில் மட்டுமே இந்த அளவிலேயே தண்ணீர் ஊற்று வந்து விடுகின்றது. ஆனால் 900 அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்காமல் பணம் செலவிட்டும் பயனில்லாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இந்த நிலைக்கு காரணம் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து நிலத்தின் மேற்பரப்பில் பிளாஸ்டிக் படிந்து மழை நீர் நிலத்திற்குள் உறிஞ்சப்படாமல் தடுக்கப்பட்டு வீணாவது தான் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரவக்குறிச்சி பகுதியில் நீர்நிலைகள், சாக்கடைகள் என்று எங்கு நோக்கினாலும் பிளாஸ்டிக் பைகள், பேப்பர்கள் என்று பரவிக் கிடக்கின்றது. பிளாஸ்டிக் பயன்பாடு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நடைமுறையில் இல்லை.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. வரும் கோடை காலத்தில் இதனால் வரலாறு காணாத அளவு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. விவசாயம் பொய்த்து போய் விவசாயிகள் சோற்றுக்கு திண்டாடும் நிலை உண்டாகும். பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களால் குளம் குட்டை வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அடைத்துக் கொண்டு உள்ளது. பிளாஸ்டிக் மக்காமல் மண்ணின் மேற்பரப்பில் படிந்து விடுவதால் மழை நீர் மண்ணிற்குள் உறிஞ்சப்படுவதில்லை. இதனால் நீராதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணீர் வராததற்கு பிளாஸ்டிக் பயன்படுதான் காரணம். பிளாஸ்டிக் பயன்பாடு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நடைமுறையில் இல்லை. பிளாஸ்டிக் பற்றிய தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு வகையில் பிளாஸ்டிக் உற்பத்தியை தடுத்தாலே பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு நீர் ஆதாரம் பெருகும். விவசாயம் செழிக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்றனர்.



Tags : area ,Aravacurichi ,Adalapatalai , Arawakurichi, Plastic, Ground Water Level
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...