கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி செக்போஸ்ட் அருகே வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன் கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

இந்த சந்தைக்கு வாரந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வரத்தாகும். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையினால் ஆறுகள், வாய்க்கால்களில் பாசனத்திற்காக தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், உள்ளாட்சி தேர்தல் காரணமாகவும் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு கடந்த 3 வாரமாக மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று கூடிய சந்தையில் கடந்த வாரத்தை போலவே பசு-300, எருமை-100, கன்று-100 என மொத்தம் 500 மாடுகள் வந்தது. வரத்தான மாடுகள் 90 சதவீதம் விற்பனையானதாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>