×

வாழையில் ஊடுபயிராக செண்டு மல்லி விளைச்சல் அமோகம்

*கம்பம் விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் : கம்பம் பள்ளதாக்குப்பகுதியில் வாழைக்கு ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் செண்டு மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் அமோக விளைச்சலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் பள்ளதாக்குப்பகுதி விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. கம்பம் சுற்றுப்புற கிராமங்களில் முல்லைப்பெரியாறு நீர் மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம் வாழை, திராட்சை, தென்னை மற்றும் பீட்ரூட், முள்ளங்கி, நூக்கல் உள்ளிட்ட காய்கறிகளும் பயிர் செய்து வருகின்றனர்.

தற்போது கூடலூர், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழைக்கு ஊடு பயிராகவும், தனிப்பயிராகவும் செண்டு மல்லி பூ பயிரிடப்பட்டுள்ளது. சுப, துக்க காரியங்களுக்கென செண்டு மல்லி எல்லாக் காலத்திலும் மக்களால் விரும்பி வாங்கக் கூடியது என்பதால் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  கடந்த அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட செண்டு மல்லி பூ தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்த செண்டு பூக்களை கம்பம், சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

தற்போது கிலோ ஒன்றுக்கு விவசாயிகளுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயத்துறையினர் கூறுகையில், வாழை, மஞ்சளில் ஊடு பயிராகவும், தனிப்பயிராகவும் செண்டு மல்லி பூ பயிரிடப்படுகிறது.  வாழைக்கன்றுகளின் கிழங்குகளில் ஓட்டையிடும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த செண்டுமல்லி ஊடுபயிராக இடப்படுகிறது. நடவு செய்யப்பட்ட அறுபது நாட்களில் செண்டு மல்லி பூ பிடித்து விடுகிறது. பின்னர் நூறு நாட்கள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கிறது. ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் செண்டு மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள், அமோக விளைச்சலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

Tags : cumbum,Gentle coriander Flower , banana Tree
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...