×

இன்று (டிச.28) லியூ சியாபோ பிறந்தநாள் : நோபல் பரிசை பெறாமலே உயிரிழந்த சீன எழுத்தாளர்

ஒருவருக்கு உயரிய விருது அறிவிக்கப்படுகிறது. அதை பல ஆண்டுகளாக பெற முடியாமலேயே உயிரிழந்த கதை தெரியுமா? அவர்தான் சீன புரட்சியாளர் லியூ சியாபோ. எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவர். இவருக்குத்தான் கடந்த 2010ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், பெறாமலே நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

அவரைப்பற்றி அறிவோமா?

சீனாவின் ஷாங்சான் நகரில், 1955, டிசம்பர் 28ம் தேதி பிறந்தர் லியூ சியாபோ. சிறந்த எழுத்தாளரான இவர் சீன அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார். இது மக்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சீன அரசு இவர் மீது கடும் கோபமடைந்தது. லியூ சியாபோவின் ஜனநாயகக்கருத்துகள் அரசுக்கு எதிரானவை; தேசத்துரோகம் என சீன அரசு கூறியது. பல முறை அவர் கைது செய்யப்பட்டார். 1996ல் அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து ஆட்சி முறையை பற்றி கடுமையாக எழுதி வந்தார்.

இதனால் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரது போராட்ட முறைகள் உலக அளவில் அனைவரையும் ஈர்த்தன. இதற்காக அவருக்கு 2010ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறையில் லியூ சியாபோவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சோதனையில் கல்லீரல் புற்றுநோய் வந்தது தெரிய வந்ததும், இவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க சீன அரசு முடிவு செய்தது.

அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. உலகம் முழுவதிலுமிருந்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா, ஜெர்மனியைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர்கள் லியூ சியாபோவை சந்தித்து பரிசோதிக்க சீன அரசு அனுமதித்தது. அவரை அமெரிக்கா அல்லது ஜெர்மனியில் சிகிச்சை பெற அனுப்ப வேண்டும் என்ற அவர்களது மருத்துவ ஆலோசனை குறித்து சீனா எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. இதனிடையே, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஷென்யாங் நகர மருத்துவமனை வெளியிட்டு வரும் மருத்துவ அறிக்கைகளிலிருந்து, அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அவர் இறக்கும் தருவாயில் உள்ளதைக் காட்டுவதாகவும் உள்ளது என்று வெளிநாட்டு மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.

அந்த சூழலிலும் அவரது மனைவி மட்டுமே அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டார். உறவினர்கள், நண்பர்கள் கூட அருகிலிருக்க அனுமதிக்கப்படவில்லை. வாழ்க்கையில் மட்டுமல்ல... உடல்நலத்திலும் பாதிக்கப்பட்டு நோயோடு போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் நோயே வென்றது. ஆம்... 2017, ஜூலை 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்லியூ சியாபோ. அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை பெறாமலே உயிரிழந்தார் லியூ சியாபோ. இதுபோன்ற துயரம் வேறு யாருக்குமே நிகழ்ந்திருக்காது என சீன அரசுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 61 வயதில் உயிரிழந்தாலும், தனது போராட்ட முறைகளால் இன்றளவும் சீன இளைஞர்களின் மனதில் ஹீரோவாகவே வாழ்ந்து வருகிறார்
லியூ சியாபோ.

Tags : Liu Xiaobo Birthday ,Chinese ,Liu Xiaobo ,Peace Birthday , Liu Xiaobo,Chinese writer,Nobel Price for peace,December 28
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...