×

பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஓபிஎஸ் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை,: பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழக சட்டப்பேரவை வருகிற 6ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார். அவர் உரையாற்றி முடித்ததும், தமிழில் சபாநாயகர் தனபால் உரையாற்றுவார். அவர் உரையாற்றியதும் அன்றைய கூட்டம் முடிவடையும். அன்றைய தினமே சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும். அதில் எத்தனை நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அநேகமாக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து ஜனவரி 7, 8, 9, 10 ஆகிய 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

முதல் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அதன் தொடர்ச்சியாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் துறைவாரியான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் க.சண்முகம், நிதித்துறை செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் அனைத்து துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட் கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கலாம், எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : OBS ,budget session Budget session ,executives ,OPS , Budget session, led by OPS, top executives, consulting
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி