×

ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தும் பாஜ மத்திய அரசின் விளம்பர தூதராக ராணுவ தளபதி செயல்படுகிறாரா?: முத்தரசன் கண்டனம்

சென்னை: ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் பாஜ மத்திய அரசின் விளம்பர தூதராக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் செயல்பட்டு வருகிறாரா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசியல் நிகழ்வுகளிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் பல நெருக்கடிகளிலும் இந்திய ராணுவம் தனது கடமைப் பொறுப்புகளை மிகக் கட்டுப்பாடாக மேற்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அதன் அதிகார எல்லைகளை மீறியதில்லை.

ஆனால் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் பாஜ மத்திய அரசின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறாரா என்ற கேள்வி எழும்புகிறது. முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரு தலைமை செயல் அதிகாரியை நியமித்துக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதும், அந்தப் பொறுப்பில் ஜெனரல் ராவத் நியமிக்கப்படலாம் என்ற செய்தியும் இந்திய ராணுவம் மதவாத அரசியல் மயப்படுத்தப்படுகிறதோ என்ற ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள் குறித்து பகிரங்கமாக விமர்சித்தார். தொடர்ந்து பங்களாதேஷ் சென்ற போது அசாம் மாநிலத்தில் குடியேறியுள்ளோர் பிரச்னை குறித்து பேசினார்.

இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்களை எதிர்கட்சிகளின் பொறுப்பற்ற செயல், எதிர்கட்சி தலைவர்கள் தலைமை பண்பு இல்லாதவர்கள், நாட்டை தவறாக வழி நடத்துபவர்கள் என குற்றம் சாட்டி பேசத் தொடங்கியுள்ளார். இப்படி ராணுவ ஜெனரல் அத்துமீறி பேசுவதும், இதனை மத்திய அரசும், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் போன்றோர் வாய் திறந்து கண்டிக்காமல் மவுன சாட்சியாக இருப்பதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் பாஜ மத்திய அரசு, அரசியல் அமைப்பு சட்டத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தி, சிதைத்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போது ராணுவத்தை மதவாத அரசியல் மயப்படுத்தும் பொறுப்பு ஜெனரல் ராவத்திடம்  ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ராணுவ ஜெனரல் ராவத்தின் அத்துமீறலை இந்திய கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. ஜெனரல் ராவத் போன்ற பொறுப்பற்ற ராணுவ அதிகாரிகளை அரசியல் சாசனம் சார்ந்த, குடிமைப் பொறுப்புகளில் நியமிக்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : commander ,military commander ,Army ,Baja Center ,RSS ,Mutharasan ,Bharatiya Janata Party , RSS act , ambassador of Bharatiya Janata Party, military commander? , Mutharasan condemned
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...