×

ரயில்வேயில் முதல்முறையாக சாதனை: உயிர் பலி இல்லாத 2019

புதுடெல்லி: ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக, விபத்துகளில் உயிர் பலியே இல்லாத ஆண்டாக 2019 கழிந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய துறையாக இந்திய ரயில்வே விளங்குகிறது. இதில் ஆண்டுதோறும் விபத்துகளும், உயிர் பலிகளும் நடப்பது சாதாரணமாக இருந்தது. ஆனால், இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ‘உயிர் பலி’ இல்லாத ஆண்டாக 2019ம் ஆண்டு கழிந்துள்ளது. இது, மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, தடம் புரள்வது, தீ பற்றுதல், லெவல் கிராசிங் விபத்துக்கள் போன்றவை ரயில் விபத்துக்களில் உள்ளடங்கும். ரயில் விபத்துக்களின்போது ஏற்படும் இறப்புக்கள் கணக்கில் கொள்ளப்படும். அதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள், பயணிகள், மற்றவர்கள் என வகைப்படுத்தப்படும். ரயில் முன் விழுந்து இறப்பவர்களை ரயில் விபத்தில் இறப்பவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இந்தாண்டு நடந்த ரயில்வே விபத்துக்கள் தொடர்பாக, ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1990-1995 கால கட்டத்தில் சராசரியாக ஒவ்ெவாரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட  ரயில் விபத்துக்கள் நிகழும். இந்த 5 ஆண்டில் 2,400 உயிரிழப்புகளும், 4300  பயணிகள் காயமும் அடைந்தனர். பின்னர், 2013-2018 காலகட்டத்தில்  சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 110 விபத்துகள் நடந்தன. இதில், 990 பேர்   உயிரிழந்தனர். 1500 பேர் காயமடைந்தனர்.  கடந்த 2016-2017ம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு ரயில் விபத்துகளில் மொத்தம் 195 பேர் உயிரிழந்தனர். இதுவே, 2017-2018ம் ஆண்டில் 28 ஆக குறைந்தது. கடந்த 2018-2019ம் ஆண்டு ரயில் விபத்துகளில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 16. ஆனால், 2019ம் ஆண்டில் பயணிகள் ரயில் விபத்துகள் ஏற்படவில்லை.

ஆனால், சில இடங்களில் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் தடம் புரண்ட சம்பவங்கள் நடந்தன. கடந்த 12 ஆண்டுகளில் சில ரயில்வே ஊழியர்கள் விபத்தில் இறந்துள்ளனர். 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். 2019ல் நடந்த விபத்துகளில் ரயில் பயணிகள் யாரும் உயிர் இழக்கவில்லை. கடந்த ஆண்டு ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான ஆண்டாக இருந்தது.

பானி புயலில் 1,900 பேர் பலி
இங்கிலாந்தை சேர்ந்த ‘கிறிஸ்டியன் எய்ட்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த பானி புயல் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்தியாவை தாக்கியது. இந்த புயலால், வங்கதேசம், சீனாவின் சில பகுதிகளில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பொழிவு காணப்பட்டது. பானி புயலால் மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பானி புயல், மழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் வட இந்தியாவில் இந்தாண்டு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்  மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 34 லட்சம் பேர் இடம் பெயரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் வேருடன் சாய்ந்தன.  1900 பேர் இறந்துள்ளனர். பருவநிலை மாற்றமே இதுபோன்ற பயங்கர புயலுக்கு  காரணம்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Railways , Railways, in the absence of a living sacrifice,
× RELATED சென்னை எழும்பூர் – புவனேஸ்வர்,...