×

மம்தா பானர்ஜி சூளுரை உயிருடன் உள்ள வரை அனுமதிக்க மாட்டேன்

நைஹாதி: ‘‘நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன்,’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இவற்றை எதிர்த்து  தனது மாநிலத்தில் தொடர்ச்சியாக பிரமாண்ட பேரணிகளை தானே தலைமையேற்று நடத்தி வருகிறார். நைஹாதி பகுதியில் மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில்  மம்தாவும் கலந்து கொண்டார்.பின்னர் பேசிய அவர், ‘‘நாட்டில் உள்ள மக்களின் குடியுரிமை உரிமையை யாராலும் பறிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன்.

இந்த நாட்டை விட்டும், மாநிலத்தை விட்டும் யாரும் வெளியேற தேவையில்லை. மேற்கு வங்கத்தில் எந்த தடுப்பு முகாமும் கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்ைக எடுக்கிறது. பல்கலைக் கழகத்தில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுகிறார்கள். 18 வயதானவுடன் அரசை தேர்ந்தெடுக்க மாணவர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால்,  கடுமையான சட்டத்தை எதிர்த்து அவர்கள் போராடக் கூடாதா?” என்றார்.  

‘மக்களை தாக்கும் திரிசூலம்’
மும்பையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை நாட்டில் உள்ள மக்களின் இதயங்களை தாக்கும் திரிசூலமாக பயன்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டங்களை அது பின்பற்றவில்லை.  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொய்யை உற்பத்தி செய்கின்றனர்,” என்றார்.


Tags : Mamta Banerjee , Mamta Banerjee, Citizenship Amendment Act
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...