×

காஷ்மீர் பாணியில் நடக்கும் போராட்டத்தை தடுக்க உபி.,யில் ராணுவம் குவிப்பு டிரோன்களில் கண்காணிப்பு: டெல்லி, ராஜஸ்தானில் ஆர்ப்பாட்டம்

லக்னோ: உத்தர பிரதேசம், டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது. பிரதமர் வீட்டை நோக்கி சென்ற பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு போராட்டங்கள் நடத்தப்படுவது தொடர்ச்சியாக நடக்கும். அப்போது, பாதுகாப்பு படைகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இப்போது நடக்கும் போராட்டமும், சில மாநிலங்களில் வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு நடத்தப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த வன்முறையை போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, நேற்று அப்பகுதியில் தொழுகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காசியாபாத், புலந்த்சஹர், மீரட், முசாபர்நகர், சாம்லி பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக இணையதள சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.  

உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் நேற்று இணையதள சேவை ரத்து செய்யப்பட்டது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, 3,500 மத்திய துணை ராணுவப்படை வீரர்களும், 12,000 ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மேலும், ஆளில்லா குட்டி விமானங்களும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை, அசாம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக முடிந்தது.  தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை தொழுகை, சில இடங்களில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து வடகிழக்கு பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  சீலம்பூர், ஜப்ரபாத், முஸ்தபாபாத் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஜாமியா நகர் ஜும்மா மசூதி, சாணக்கியபுரி பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொழுகை அமைதியாக நடைபெற்றது. தொடர்ந்து ஜும்மா மசூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி டெல்லியில் உள்ள ஜோர் பாக்ஷா இமர்தான் தர்காவில் இருந்து பிரதமர் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கை நோக்கி பீம் ஆர்மி உறுப்பினர்கள் நேற்று பேரணியாக புறப்பட்டனர். தங்கள் கைகளை கட்டியபடி ஊர்வலமாக ெசன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நேற்று ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் அஜ்மீர் தர்கா காதிம் உள்ளிட்டோர் கண்டன பேரணி நடத்தினர். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என கருத்து தெரிவித்த தர்காவின் தலைவர் தீவன் ஜூய்னுல் அப்தின் அலிகானின் உருவ பொம்மைக்கு தீவைத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போலீசை காப்பாற்றிய தேவதை
உபி.யில் கடந்த 20ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெரோஷாபாத்தில் நடந்த போராட்டத்தில், அஜய் குமார் என்ற போலீஸ்காரரை வன்முறை கும்பல் சரமாரியாக சூழ்ந்து தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உயிர் பிழைக்க போராடிய அவரை, அப்பகுதியை சேர்ந்த முஸ்லிமான காதிர் சகாப் என்பவர் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து சென்றார். இது பற்றி அஜய் குமார் கூறுகையில், ‘‘தண்ணீர், உடை கொடுத்து காப்பாற்றிய அவர்தான், எனது கண்களுக்கு அப்போது தேவதையாக தெரிந்தார். அவர் மட்டும் வராமல் போயிருந்தால், போராட்டக்காரர்கள் என்னை கொன்று இருப்பார்கள்,’’ என்றார்.

உபி.யில் தாக்குதல் நடத்திய காஷ்மீர் கல் வீச்சாளர்கள்
உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டங்களின் போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இது பற்றி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், ‘‘உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் குழுக்கள், சிறப்பு அழைப்பு விடுத்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, பாதுகாப்பு படைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன,’’ என்றார்.



Tags : Army ,UP ,Kashmir ,Rajasthan , Kashmir, style, agitation, UP, military focus, Delhi, Rajasthan, demonstration
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...