×

குடும்பத்தினருடன் வந்து சொந்த ஊரில் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான இடைப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் வரிசையில் நின்று  உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார். தமிழகத்தில் நேற்று முதல் கட்டமாக 156 ஒன்றியங்களுக்கான தேர்தல் நடந்தது. முக்கிய பிரமுகர்கள் தங்களது சொந்த கிராமங்களில் காலை 7 மணி முதல் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த நெடுங்குளம் ஊராட்சியிலுள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 83ம் எண்  மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதற்காக  நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், 11.20 மணிக்கு ஓமலூர் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் சிலுவம்பாளையத்திற்கு சென்றார். இதையடுத்து  12.15மணிக்கு மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோருடன் வாக்குச் சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்தார். 12.40மணிக்கு வாக்கு செலுத்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த மையத்தில் ஆண்கள் 234, பெண்கள் 257 என்று மொத்தம் 491 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு மட்டுமே நடந்தது. இதற்கான 3 வாக்குகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்தார். முதல்வர் வருகையையொட்டி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : Chief Minister ,Edappadi ,Edapadi ,hometown ,first , Edapadi , first to come , family, stand , in line, and vote
× RELATED இன்னும் 9 நாளில் வாக்குப்பதிவு தமிழகம்...