×

சட்டீஸ்கரில் ராகுல் ஆவேச பேச்சு: குடிமக்கள் பதிவேடும், என்பிஆரும் பணமதிப்பிழப்பு போன்ற தாக்குதல்: எதுவும் தெரியாமல் இருக்கிறார் பிரதமர்

ராய்பூர்: ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடும், என்பிஆரும் ஏழை மக்கள் மீது தொடுக்கப்படும் பணமதிப்பிழப்பு போன்ற தாக்குதலாகும்,’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ‘தேசிய பழங்குடியின நடனத் திருவிழா’ நேற்று தொடங்கியது. 3 நாள் திருவிழாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். விழாவில், அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘அனைத்து மதம், சாதி, பழங்குடி, தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்பினரை இணைந்துக் கொள்ளாமல், இந்திய பொருளாதாரத்தை இயக்க முடியாது. நாட்டு மக்களை ஒன்றிணைத்து, ஒற்றுமை படுத்தாமல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்தநிலை பிரச்னையை உங்களால் தீர்க்கவே முடியாது. மக்களை அவர்களுக்குள் சண்டை மூட்டி விடுவதால் இந்த நாடு ஒருபயனும் அடையாது,’’ என்றார்.

பின்னர், டெல்லி திரும்புவதற்காக விமான நிலையம் வந்த அவரிடம், ‘தேசிய மக்கள்தொகை பதிவுக்கும் (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் (என்ஆர்சி) எந்த தொடர்பும் இல்லை,’ என மத்திய அரசு கூறியிருப்பது பற்றி கேட்கப்பட்டது.  அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: என்பிஆர் அல்லது என்ஆர்சி என எதுவாக இருந்தாலும், அது நாட்டின் ஏழைகள் மீது சுமத்தப்படும் வரி தாக்குதல்தான். அதாவது, பணமதிப்பிழப்பை போன்றது. வங்கிக்கு செல்ல வேண்டும், அதில் பணத்தை போட வேண்டும், ஆனால், உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. ஒட்டுமொத்த பணமும் 15-20 பணக்காரர்கள் பைக்கு போய்விடும். அதே மாதிரி, ஏழைகள் அதிகாரிகளிடம் தங்கள் ஆவணங்களை காட்ட வேண்டும். அதில், பெயரில் ஏதேனும் சிறு குறை இருந்தால் கூட, அதற்காக ஏராளமாக லஞ்சம் தர வேண்டும். இப்படி ஏழைகள் சட்டை பையிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்து 15 தொழிலதிபர்களுக்கு கொடுப்பார்கள்.

நாட்டின் பொருளாதாரம் முன்பு 9 சதவீதமாக இருந்தது. இப்போது, 4 சதவீதமாக சரிந்துள்ளது. அதை கூட புதுப்புது தொழில்நுட்பம் மூலம் மதிப்பிடுகிறார்கள். ஆனால், பழைய வழக்கப்படி மதிப்பிட்டால், 2.5 சதவீதம் மட்டுமே இருக்கும். இந்தியா இன்று வன்முறையில் தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பற்றியும், பெண்கள் சுதந்திரமாக சாலையில் செல்ல முடியாத அவலத்தை பற்றியும், 45 ஆண்டில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதைப் பற்றியும் உலக நாடுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நம் பிரதமர் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என எதையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். முன்பு, போலி வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இனி, அவர் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இன்று கட்சி நிறுவன நாள் நாடு முழுதும் காங்கிரஸ் பேரணி:
காங்கிரஸ் கட்சி கடந்த 1885ம் ஆண்டு, டிசம்பர் 28ம் தேதி மும்பையில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவன நாளையொட்டி இன்று நாடு முழுவதும் காங்கிரசார் அணிவகுப்பு பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தற்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடிவரும் நிலையில், ‘அரசியலமைப்பை காப்போம் - இந்தியாவை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இன்றைய பேரணியை காங்கிரஸ் நடத்துகிறது.  மாநில தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகங்களிலும் கட்சி கொடியை ஏற்றி வைக்கும் மாநில தலைவர்கள், பின்னர் அணிவகுப்பு பேரணியில் தலைமை தாங்கி நடத்தி செல்ல உள்ளனர். அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்கிறார்.

‘ஆண்டின் பெரிய பொய்யர்’:
பாஜ மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2010ல் கூட இதே போன்ற மக்கள் தொகை பதிவேடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவராக இருந்த போதும், அப்பதவியில் இருந்து விலகிய போதும் கூட ராகுல் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆண்டின் பெரிய பொய்யருக்கான விருது பிரிவு ஒன்று இருந்தால், நிச்சயம் அதை ராகுல் பெற்றிருப்பார். அவரது பொய் பேச்சுகளால் சொந்த கட்சியையும், மக்களையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்,’’ என்றார்.

பழங்குடியினருடன் ராகுல் காந்தி நடனம்:
பழங்குடியினர் நடன திருவிழாவில், 25 மாநிலங்களைச் சேர்ந்த 1350க்கும் மேற்பட்ட பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்றனர். இதில், ராகுல் காந்திக்கு பழங்குடியினரின் பாரம்பரிய தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. மேடையில் நடன குழுவினருடன் கையில் மேளத்தோடு அவர் நடனமாடியதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.



Tags : speech ,NPR ,Rahul ,Chhattisgarh , Chhattisgarh, Rahul, Citizens Register, NPR, Prime Minister
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...