×

கஜகஸ்தானில் அதிகாலை பயங்கரம் 2 மாடி கட்டிடத்தில் மோதி நொறுங்கியது விமானம்: 12 பயணிகள் பலி 53 பேர் படுகாயம்

மாஸ்கோ:  கஜகஸ்தானில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், 2 மாடி கட்டிடத்தில் மோதி நொறுங்கி விழுந்தது. இதில் 12 பேர் பலியாகினர். 53 பேர் படுகாயமடைந்தனர். கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை, ‘பாக்கர்- 100’ என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில், 95 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் இருந்தனர். தலைநகர் நுர்சுல்தான் நோக்கி சென்ற இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 2 மாடி கட்டிடம் ஒன்றின் மீது மோதி நொறுங்கி கீழே விழுந்தது.  இதில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானது. விமானத்தின் சில பகுதிகளும் தீப்பற்றி எரிந்தன.   தகவல் அறிந்த மீட்பு குழுவினர், அங்கு விரைந்தனர். விமான இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் விமானி உட்பட 12 பேர் பலியாகினர். சம்பவ இடத்தில் 8 பேரும், விமான நிலைய சிகிச்சை பிரிவில் 2 பேரும், மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்தனர்.  மேலும், 53 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்ற பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கஜகஸ்தான் துணை பிரதமர் ரோமன் ஸ்கைலர் கூறுகையில், “விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் பின்பகுதி இரண்டு முறை தரையில் உரசியுள்ளது. இது விமானியின் தவறு அல்லது தொழில்நுட்ப பிரச்னையாக இருந்து இருக்கலாம். விமானம் மோதிய வீட்டில் யாரும் இல்லை. இதனால், அங்கு உயிர் பலி எதுவும் நடக்கவில்லை. விமானம் சரியாக எட்ட வேண்டிய உயரத்தை எட்டாமல், வழக்கத்துக்கு மாறாக தாழ்ந்து பரந்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப பிரச்னை காரணமா அல்லது வேறு பிரச்னையா என விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அதிபர் காஷ்யம் ஜோமார்ட் உறுதியளித்துள்ளார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். விமான விபத்து குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்துக்குள்ளான பாக்கர் 100 விமானம் 23 ஆண்டுகள் பழமையானதாகும்.



Tags : passengers ,crash ,Kazakhstan ,building ,plane crashes , 12 passengers killed, 53 injured in Kazakhstan plane crash
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!