புதுக்கோட்டை: வாக்கு பெட்டியை துாக்கி சென்ற வாலிபரால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கருவேல காட்டுக்குள் தலைக்கு வைத்து படுத்திருந்த போது சிக்கிய சம்பவம் விராலிமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெம்மணி கிராம பஞ்சாயத்து வார்டு எண் 5க்கான தேர்தல், பெரிய மூலிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட பிறகு ஒரு தரப்பினர் வாக்களிக்க வந்துள்ளனர். அப்போது மற்றொரு தரப்பினர் வாக்களிக்கும் நேரம் முடிந்துவிட்டது. எனவே வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது போலீசார் சமாதானப்படுத்தி கொண்டு இருந்தபோது பெரிய மூலிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி(19) என்பவர் வாக்குப்பட்டியை தூக்கி கொண்டு ஓடினார். அவரை பின்தொடர்ந்து போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓடினர்.
அதற்குள் மூர்த்தி வாக்குபெட்டியுடன் சென்று கருவேல காட்டுக்குள் சென்று மறைந்து விட்டார். இதனையடுத்து போலீசார் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு கருவேல மரங்களுக்கு இடையில் பெட்டியை தலைக்கு வைத்து கொண்டு படுத்து கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை பிடித்து வாக்கு பெட்டியை பத்திரமாக மீட்டு வாக்குசாவடிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் ஏடிஎஸ்பி இளங்கோ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்பி அருன்சக்திகுமார் மற்றும் இலுப்பூர் ஆர்டிஓ டெய்சிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து வாக்குவாடியில் இருந்த அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குப்பெட்டி எந்த சேதாரம் இன்றி இருந்ததால் சீல்வைத்து வாக்கு என்னும் மையத்திற்கு எடுத்து சென்றனர். இதனையடுத்து வாலிபர் மூர்த்தியை மண்டையூர் போலீசார் கைது செய்தனர்.