×

ஈரானில் சர்ச்சைக்குரிய அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்

டெஹ்ரான்: ஈரானில் அணுமின் நிலையம் அருகே நேற்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.  ஈரானின் தெற்கு பகுதியில் புஷேர் அணுமின்  நிலையம் அமைந்துள்ளது. அந்நாட்டின் ஒரே அணுமின் நிலையமான இங்கு 1000 மெகவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில்தான் ஈரான் அணுகுண்டு தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த அணுமின் நிலையம் அருகே நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போரஸ்ஜான் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில், 38 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

ஈரானின் புவியியல் ஆய்வு மையம் முதலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 10 கிமீ ஆழத்தில் அது உருவானதாகவும் குறிப்பிட்டு இருந்தது. அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் காரணமாக அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் ஈரானின் கெர்மான்ஷாவில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், 620 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Earthquake ,facility ,Iran , Iran, nuclear plant, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்