×

ஆந்திராவுக்கு ஒரு தலைநகரமா? 3 தலைநகரங்களா? அமைச்சரவை கூட்டத்தில் இழுபறி

திருமலை: ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் அமைப்பதில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் கமிட்டிகளின் அறிக்கையையும் பரிசீலித்து முடிவு எடுப்பது என்று ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவில் கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு, இம்மாநிலத்தின் தலைநகரை அமராவதியில் ரூ.1 லட்சம் கோடி செலவில் அமைக்க திட்டமிட்டார். தற்போது ஆட்சி நடத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த ஒரு தலைநகரத்துக்கு பதிலாக 3 தலைநகரங்கள் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். அமராவதி தலைநகரத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை பிரித்து, கூடுதலாக 2 தலைநகரங்கள் அமைப்பதே அவருடைய திட்டம். இதற்கு தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தலைநகரம் பற்றி முடிவு எடுப்பதற்காக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தித்துறை அமைச்சர் பேர்னி நானி கூறியதாவது: மாநிலம் முழுவதும் சமவளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் தலைநகர் அமைப்பது குறித்து ஜி.என்.ராவ் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், சர்வதேச அளவிலான தனியார் ஆய்வு நிறுவன குழுமம் அடுத்த மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இந்த இரண்டு அறிக்கையை வைத்து உயர்மட்ட அளவில ஆலோசித்து தலைநகர் குறித்து முடிவு எடுக்கப்படும். தலைநகருக்காக ரூ.5,400 கோடி கடனுக்கு மாநில அரசு ஆண்டுக்கு ₹570 கோடி வட்டி கட்ட வேண்டிய நிலையில் உள்ளது. இதற்கிடையே ₹1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி தலைநகரை அமைத்தால் அதற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்பதை ஆலோசிக்க வேண்டும். கனவு தலைநகரை அமைப்பதை காட்டிலும் நலத்திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊழல் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு
அமராவதி தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம் ஊழல் செய்தது குறித்து அமைச்சர்கள்  தலைமையிலான சப்-கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இந்த  அறிக்கையில் கடந்த ஆட்சியில் மாநில அரசில் இருந்த முதல்வர், அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் என பலர் 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தலைநகர்  அறிவிப்பதற்கு முன்பு அந்த சுற்று வட்டார பகுதிகளில் நிலங்களை வாங்கி  மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ, சிபிசிஐடி, லோக் ஆயுக்தா போன்ற எந்த அமைப்பில்  விசாரணைக்கு வழங்குவது என்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று  ஒப்படைக்கப்படும்.

ஆம்புலன்ஸ் வாங்க 71.48 கோடி
மாநிலத்தில் விபத்து நடந்தால் 20 நிமிடத்தில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் விதமாக 412- 108 சேவை வாகனங்கள் வாங்குவதற்கு 71.48 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 2020 மார்ச் 31ம் தேதிக்குள் வாங்க  உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Capitals ,capital city ,Andhra Pradesh ,cabinet meeting , Andhra, a capital city, 3 capitals, cabinet meeting
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...