×

சைதாப்பேட்டை பகுதியில் கைவரிசை காட்டிய பிரபல பைக் கொள்ளையன் சிக்கினான்: 15 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சைதாப்பேட்டை பகுதியில் தொடர் ைபக் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட பைக், பேட்டரி, இன்ஜின்களை பறிமுதல் செய்தனர். சென்னை சைதாப்பேட்டை மற்றும் சின்னமலை பகுதியில் சாலையோரம் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பைக்குகள் மாயமாகி வந்தது. இது குறித்து சைதாப்பேட்ைட காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர் புகார்கள் அளித்தனர். அதன்படி குற்றவாளியை பிடிக்க சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை லாவகமாக திருடி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய உருவ படத்தை வைத்து போலீசார் தேடி வந்தனர். அப்போது சின்னமலை, தாலுகா ஆபிஸ் சாலை பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (30) என தெரியவந்தது.

மேலும், இவன் மீது சைதாப்பேட்ைட, கிண்டி, கோட்டூர்புரம் காவல்நிலையங்களில் பைக் திருடிய வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர். விசாரணையில் மதுபோதைக்கு அடிமையானதால் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தில் மது அருந்தி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 15 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். „ நெற்குன்றம், எம்ஜிஆர் நகரை சேர்ந்த அஜித்குமார் (25) என்பவரை தாக்கி ஆட்டோவை கடத்த முயன்ற நெற்குன்றத்தை சேர்ந்த தனஞ்செழியன் (28), மதுரவாயலை சேர்ந்த சதீஷ் (28) மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். „ குன்றத்தூர், சிக்கராயபுரத்தை சேர்ந்தவர் முருகன். அண்ணாநகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ. இவரது மகன் திபு (23). குன்றத்தூர் தனியார்  கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் சிடிஎச் சாலையில் திபு பைக்கில் சென்றபோது பின்னால் வந்த வேன் இவரது பைக் மீது மோதியதில் திபு தூக்கி வீசப்பட்டு இறந்தார்.

„ கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தர்மபுரி, கோட்டை கோயில் தெருவை சேர்ந்த சபரி (23) என்பவர் பெயின்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு சபரி சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். „ பெரவள்ளுர் கம்பர் நகரை சேர்ந்தவர் அந்தோணி (83). இவரது மனைவி தெரசா (75). கடந்த மாதம் 17ம் தேதி மாலை வீட்டின் அருகே தெரசா நடைபயிற்சி சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். புகாரின்பேரில் பெரவள்ளுர் போலீசார் வழக்குபதிவு செய்து கொளத்தூர் பகவதி அம்மன் கோயில் தெருவை  சேர்ந்த வினித் (19) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர். அவரிடமிருந்து 4 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

„ ஓட்டேரி மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (36). ஐ.டி ஊழியர். கடந்த 10ம் தேதி வீட்டின் மேசை மீது லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது ஜன்னல் கம்பிகள் நீக்கப்பட்டு லேப்டாப் மற்றும் 2 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் ஓட்டேரி குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி பனந்தோப்பு காலனியை சேர்ந்த சாலமன் (18) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சாலமன் தனது நண்பர்களான ரபீக் என்ற சொல்யுசன் ரபீக், சபிக் ஆகிய 3 பேரும் சேர்ந்த இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சாலமனிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

„ கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (50). பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மோகன் கடையை திறக்க வந்தபோது  பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ₹20 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. இதேபோல் அவரது கடையின் பக்கத்தில் உள்ள வீட்டில் துர்காஜுலு (50) என்பவர் வசித்து வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன்  வெளியூர் சென்றுள்ளார். அவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து 3 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடி சென்றனர். புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : bike robber ,area ,Saidapet , Saidapet, bike robber, 15 vehicles
× RELATED வாட்டி வதைக்கும்...