×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

தண்டையார்பேட்டை: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை சிமெட்ரி ரோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மதியம்  நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.   இதையடுத்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக பாரிமுனை, தங்கசாலை, கோயம்பேடு, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள மசூதி எதிரே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் பகுதியை சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் இயக்கப்பட்டது.  தாம்பரம்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தாம்பரம், சண்முகம் சாலையில் நேற்று கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெரம்பூர்: புளியந்தோப்பு அதன் சுற்றுவட்டார இஸ்லாமிய மக்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் புளியந்தோப்பு பட்டாளம் மார்க்கெட் கலைஞர் கருணாநிதி பூங்கா அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரசாக் தலைமை தாங்கினார். மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர்கான் வரவேற்றார்.  இதில் தமுமுக பொது செயலாளர் ஹைதர்அலி, இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம், எஸ்டிபிஐ கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ஏ.கே.கரீம், தமிழ் தேசிய இயக்கத்தின் நிறுவனர் தியாகு, எழுத்தாளர்கள் மதிமாறன், சுந்தரவள்ளி உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி: பூந்தமல்லி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் பூந்தமல்லி குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே முகமது ஹனீப் கவுஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி, போருர், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஷேக் தாவூத் தீன், பாஸுலூல்ஹ ஷெரீப், இணைய துல்லா, ஜாகீர் அப்பாஸ் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இமாம்கள், ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன், பூந்தமல்லி உதவி ஆணையர் செம்பேடு பாபு ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களால் ஆங்காங்கே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.


Tags : organizations , Citizenship Amendment Bill, Muslim Organizations, Demonstration, Transport
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!