×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காதல் ஜோடிகள் அத்துமீறல்: பொதுமக்கள் முகம்சுளிப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. சுமார் 1490 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சுமார் 1675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக நீர்யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீளவால் குரங்கு, மனித குரங்கு, புள்ளிமான், கரடி, செந்நாய், வரி குதிரை, ஒட்டக சிவிங்கி ஆகியவை ஏராளமாக உள்ளன. காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும் இந்த பூங்கா செவ்வாய்க்கிழமையில் விடுமுறை அளிக்கப்படும். கோடை விடுமுறையை ஒட்டி அனைத்து நாட்களிலும் பூங்கா திறந்திருக்கும். இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பது வழக்கம். அதேபோல் ஏராளமான காதல் ஜோடிகளும் வந்து செல்கின்றனர்.

இதுபோல் வரும் காதல் ஜோடிகள் பூங்காவில் உள்ள மறைவான இடங்கள் மற்றும் செடி புதர்களில் உட்கார்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் சிலர் பூங்காவின் வெளிப்படையான இடத்திலேயே சில்மிஷத்தில் ஈடுபடும் செயல், பூங்காவுக்கு வரும் குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுபற்றி பூங்கா உயரதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தாலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பூங்காவில் அத்துமீறல்கள் அதிகரிக்கிறது என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பூங்கா ஊழியர் ஒருவர் கூறுகையில், “இங்கு சாதாரண நாட்களை விட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

பூங்காவுக்கு நுழைவு கட்டணம் குறைவு என்பதால் ஏழை, எளிய மக்கள் என ஏராளமானோர் எளிதாக வந்து செல்லும் சுற்றுலா தலமாக உள்ளது. அதை பயன்படுத்தி காதல் ஜோடிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த காதல் ஜோடிகள் காலை 10 மணிக்கு வந்து மாலை 6 மணிவரை பூங்காவிலேயே மறைவான பகுதிகளில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் கூறினால், விடுமுறை நாட்களில் மட்டும் தான் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விடுமுறை அல்லாத நாட்களில் இதுபோன்ற காதல் ஜோடிகள் வந்தால் மட்டுமே பூங்காவுக்கு வருமானம். அதனால், இதை கண்டு கொள்ள வேண்டாம் என அலட்சியமாக தெரிவிக்கின்றனர்” என்றனர்.

Tags : Vandalur Zoo ,Romantic Couples Break Up: Public Confrontation , Vandalur Zoo, romantic couples, public
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிப்பு