×

தாம்பரத்தில் நடைபாதை கடைகள் அகற்றம் நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை: மாற்று இடம் வழங்க கோரிக்கை

பல்லாவரம்: தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் நடத்தி வந்த பழக்கடைகளை சமீபத்தில் தாம்பரம் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் நேற்று பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் கருப்பையா (பொறுப்பு) ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதியளித்தனர். அதனை ஏற்று வியாபாரிகள், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்துவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நாங்கள் மொத்தம் 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தாம்பரம் நடைபாதையில் பழக்கடை நடத்தி வருகிறோம். திடீரென எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி தாம்பரம் நகராட்சி நிர்வாகம் எங்களது கடைகளை அப்புறப்படுத்தி உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  தற்போது நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம். தாம்பரம் நகராட்சி நிர்வாகம் தான் எங்களுக்கு வியாபாரம் செய்ய தகுந்த மாற்று இடம் தந்து எங்களது வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்றனர்.


Tags : Merchants ,location ,office ,Tambaram , Tambaram, sidewalk shops, municipal office, merchants blockade
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...