×

உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத அதிபயங்கர அணு ஏவுகணையை ராணுவத்தில் இணைத்தது ரஷ்யா: யாராலும் இடைமறிக்க முடியாது

மாஸ்கோ: உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத, யாராலும் தடுக்கவே முடியாத அதிபயங்கர அவங்கார்டு ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணையை  ரஷ்யா தனது ராணுவத்தில் சேர்த்துள்ளது.  ஏவுகணைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை தாங்கிய ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அவங்கார்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய ரஷ்யா, பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது தகவல் வெளியிட்டார். தற்போதுள்ள அனைத்து ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பங்களையும் முறியடித்து, ஹைப்பர்சோனிக் ஏவுகணை இலக்கை தகர்க்கும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அவங்கார்டு ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் பொருத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, முதல் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர வேறெந்த தகவல்களும் இடம் பெறவில்லை. கடந்த வாரம் பேட்டி அளித்த ரஷ்ய அதிபர் புடின், ‘‘ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன,” என்றார். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இதுவரை எந்த உலக நாடுகளும் தனது படைப்பிரிவில் சேர்க்கவில்லை. அமெரிக்கா, சீனா போன்ற ஆயுத உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் கூட பரிசோதனை முயற்சியிலேயே உள்ளன.

எப்ப்பா... எப்பப்பா...
* ரஷ்யாவின் அவங்கார்டு ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணையின் சோதனை கடந்த மார்ச் 27ம் தேதி முதல் முறையாக நடந்தது.
* இந்த சோதனையின் போது மணிக்கு 33,000 கிமீ வேகத்தில் அது பாய்ந்தது.
* இது ஒலியை விட 20 மடங்கு அதிவேகமாக பாயும் திறன் படைத்தது.
*  பூமியில் இருந்து செங்குத்தாக வானத்துக்கு செல்லும் அது, அங்கிருந்து தனது  இலக்கை நோக்கி அசூர வேகத்தில் கீழ்நோக்கி பாய்ந்து வந்து அழிக்கும்.
* இலக்கை நோக்கி ஏவுகணை வரும்போது, அதை இடைமறித்து அழிக்கக்  கூடிய ஏவுகணை, அமெரிக்கா உட்பட எந்த நாட்டிடமும் இப்போது கிடையாது.
* வானில் இருந்து எரிகல்லை போல் பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து, இலக்கை துல்லியமாக அழிக்கும்.
*  இந்த ஏவுகணைக்கு ‘ஷிர்கோன்’ என பெயரிடப்பட்டு உள்ளது.


Tags : Russia ,world ,no one ,country ,military , Nuclear Missile, Military, Russia
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...