×

உடுமலை - மூணார் சாலையில் காட்டு யானைகள் உலா; வனத்துறை எச்சரிக்கை

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சின்னார் வழியாக கேரள மாநிலம் மூணார் செல்லும் சாலையில் காட்டு யானைகள் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மறையூர், மூணார் பகுதிகளுக்கு சின்னார் மலைவழிப்பாதை வழியே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி, உடுமலை வனசரகத்திற்குட்பட்ட சின்னார் மலைப்பாதையில் அவ்வப்போது யானை, காட்டுமாடு, மான்கள், இரை மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்வது வழக்கம். வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் தாகம் தணிப்பதற்காக அமராவதி அணைப்பகுதிக்கு கோடை காலங்களில் செல்வதும், இரவு முழுவதும் அணைப்பகுதியில் முகாமிட்டு தாகம் தணித்து பின்னர் வனப்பகுதிக்கு செல்வதுண்டு.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் மழை நீடிப்பதோடு, பனிப்பொழிவும் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் செக்டேம்கள் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வனத்திற்குள் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. கொசுக்கடி தாங்காமல் யானைகள் மாலை வேளைகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சின்னார் சாலையில் உலா வருகின்றன.

மேலும் சீமை கருவேல மரத்தில் காய்த்துள்ள காய்களை விரும்பி உண்பதற்காகவும் யானைகள் சின்னார் சாலையில் காமனூத்துபள்ளம், ஏழுமலையான் கோயில் சுற்றுப்பகுதி, புங்கன்ஓடை ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி அளவில் உலா வருகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ், ஆங்கிலபுத்தாண்டு கொண்டாடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சின்னார் மலைப்பாதை வழியே காந்தலூர், மறையூர், மூணார் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா வருகின்றனர். இவர்களிடம் வனத்துறையினர் யானை உலா வரும் பகுதிகளில் நின்று செல்பி எடுக்க கூடாது. அவற்றிற்கு ஆத்திரமூட்டும் வகையில் வாகனங்களில் ஒலி எழுப்பிய படி செல்லக்கூடாது. சாலையை விட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்த பின்னர் பயணத்தை தொடர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Udumalai - Munnar ,road ,Udumalai ,Wild Elephants , Udumalai, Munnar, Wild Elephants, Forest Department Warning, Tourists
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...