×

விபத்துக்குள்ளானவரை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாததால் ஆம்புலன்ஸை தானே இயக்கிய போலீஸ்காரர்: குவியும் பாராட்டுகள்!

திருச்சி: விபத்துக்குள்ளானவரை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாததால் ஆம்புலன்ஸை தானே இயக்கிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன்-சாந்தி. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் மூவரும் சம்பவத்தன்று, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு மாருதி காரில் சென்றுள்ளனர். தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது கரூர் சாலை புளியம்பட்டி பிரிவு அருகே எதிரில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள் கார்களின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டது.

காலை வெளியே எடுக்க முடியாமல் தியாகராஜன் வலியால் கதறியதை கண்ட பொதுமக்கள் அலறி துடித்து ஓடிவந்துள்ளனர். தியாகராஜனின் கால்களை மீட்க மக்கள் போராடியுள்ளனர். அப்போது மூலனூர் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் கணேஷ், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கியுள்ளார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது. இதனால், அதே பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்த கணேஷ், அங்கு நேரடியாக சென்றுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் மட்டும் இருப்பதாகவும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதனை இயக்க ஓட்டுனர் இல்லை எனவும் தனியார் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாமே ஆம்புலன்ஸை ஓட்டுவதாக கூறிய கணேஷ், சாவியை மட்டும் கொடுங்கள் என்று கூறி அதனை வாங்கியுள்ளார். பின்னர், உயிருக்கு போராடி கொண்டிருந்த தியாகராஜனை அதில் ஏற்றி, தானே ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்துள்ளார். தற்போது, தியாகராஜனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில், தகுந்த உதவியை செய்து ஒரு உயிரை காப்பாற்றிய கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தியாகராஜனை மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கும் வரை கணேஷ் ஒரு போலீஸ்காரர் என்பது யாருக்குமே தெரியாது என கூறப்பட்டுள்ளது.


Tags : policeman ,victim , Accident, ambulance, police, Ganesh, Trichy
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...