×

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

லாகூர்: தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப், கடந்த 1999ம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், தனது பதவிக் காலத்தில் 2007ம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்பு சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், தனக்கு எதிரான நீதிபதிகளையும், அரசியல் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். கடந்த 2008ல் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், 2013ல் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 17ம் தேதியன்று பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமத் சேத் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இதில் 2-1 என்ற விகிதத்தில் நீதிபதிகள், முஷாரப்புக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதித்தனர். தலைமை நீதிபதி வாகர் அகமது சேத் தலைமையில் நீதிபதிகள் நாசர் அக்பர், கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த 167 பக்க தீர்ப்பில், முன்னாள் அதிபர் முஷராப்புக்கு எப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் விவரித்திருந்தனர். அதில், தேசத்துரோக வழக்கு குற்றவாளி முஷாரப் எங்கிருந்தாலும், அவரை சட்ட அமலாக்கத்துறையினர் கைது செய்து அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும். சாகும் வரை அவர் தூக்கலிடப்பட வேண்டும்.

ஒருவேளை இறந்த நிலையில் முஷாரப் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது உடலை இஸ்லாமபாத்தின் டி-சவுக் பகுதிக்கு இழுந்து வந்து, 3 நாள் தொடங்க விட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய கொடூர தண்டனை விதித்துள்ள தலைமை நீதிபதிக்கு, பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மேல்முறையீடு செய்துள்ளார். மரண தண்டனையை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் தரப்பில் அவரது வழக்கறிஞர் அசார் சித்திக் முறையீடு செய்துள்ளார். 86 பக்கங்களை கொண்ட அந்த மனுவில், பாகிஸ்தான் அரசையும் மற்றவர்களையும் எதிர்மனுதாரராக சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், வரும் 2020 ஜனவரி 9ம் தேதியன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.



Tags : Pervez Musharraf ,Pakistani ,Lahore High Court , Pakistan, Musharraf, death sentence, appeal
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு