×

சோழவந்தான் ரயில்வே கேட்டில் ராட்சத தேனீக்கள்

*விரட்டி விரட்டி கொட்டுவதால்
அலறியடிக்கும் பொதுமக்கள்

சோழவந்தான் : சோழவந்தான் ரயில்வே கேட்டில் மேலே உள்ள ராட்சத தேனீக்கள் பொதுமக்களை விரட்டி விரட்டிக் கொட்டுவதால், அவர்கள் தினமும் அலறி ஓடும் நிலை தொடர்கிறது. மதுரை சோழவந்தானில் வாடிப்பட்டி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக கனரக வாகனங்களை தவிர டூவீலர், ஆட்டோ, வேன் உள்ளிட்டவை மட்டும் இவ்வழியே சென்று வருகின்றன. தினமும் அறுபதுக்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே சென்று வருகிறது.

இந்நிலையில் வடக்குப் பகுதி ரயில்வே கேட்டின் மேலே உள்ள இணைப்பு பாலத்தின் கீழ் பகுதியில் சில மாதங்களாக ராட்சத தேனீக்கள் மீண்டும் பெரியரிய கூடு கட்டியுள்ளது. மற்ற நேரத்தில் அமைதியாக இருக்கும் இந்த தேனீக்கள், அதி வேகத்தில் ரயில் செல்லும் போது அதிர்வினால் கலைந்து ரயில்வே கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டிக் கொட்டுகிறது. இதனால் கேட் மூடிய போது, நீண்ட வரிசையில் நெரிசலில் காத்திருக்கும் பொதுமக்கள், குழந்தைகள் தப்பி ஓட வழியின்றி தேனீக்களின் தாக்குதலால் அலறித் துடிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` இந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன் இதே போல் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி பொதுமக்களை விரட்டி கொட்டியது. இதுகுறித்து படத்துடன் தினகரனில் செய்தி வெளியானதை அடுத்து தீயணைப்புத் துறையினர் மிகுந்த சிரமத்துடன் மேலே ஏறி அப்புறப்படுத்தினர்.ஆனால், சில நாட்கள் கழித்து அதே இடத்தில் மீண்டும் தேனீக்கள் கூடுகட்டி அச்சுறுத்தி வருகிறது. இந்த ராட்சத தேனீக்களை அப்புறப்படுத்தும்படி சோழவந்தான் ரயில் நிலைய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

 தீயணைப்பு துறையினரிடம் தகவல் கூறினால், இதன் அருகில் ரயில் இயங்குதலுக்குரிய உயரழுத்த மின்சார வயர்கள் செல்வதால், ரயில்வே துறையினர் முறையான அனுமதியளித்த பின்தான் எடுக்க இயலும் என்கின்றனர். இங்கு பெரும்பாலும் வடமாநிலத்தவர் ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பதால் நாம் எந்த புகார் கூறினாலும் அவர்களுக்கு புரிவதில்லை. எனவே, இந்த ராட்சத தேனீக்களை அகற்ற தேவையான நடவடிக்கையை ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags : Cholavandan Railway Gate , Public,Giant bees,Cholavanthan ,Railway Station
× RELATED சோழவந்தான் ரயில்வே கேட் பகுதியில்...