×

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு டிசம்பர் 30ம் தேதி நடைபெறவுள்ளது.  இதில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி 2ல் எண்ணப்படுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். பல்வேறு இடங்களில் அதிமுக முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் வந்த நிலையில், வாக்கு பெட்டிகளில் முறைகேடு செய்யாமல் இருக்க அவற்றை பாதுகாக்க வேண்டும் என ஆர். எஸ். பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதை தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தபட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக கண்காணிக்கப்பட வேண்டும்.  வாக்குப்பெட்டி மையங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி மாநில தேர்தல் ஆணையம், டி.ஜி.பி, ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தெரிவித்ததாவது, உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம், அதேசமயம் ஆளுங்கட்சியின் குறுக்கீடு இல்லாமல் நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை நீதிமன்றம் உறுதிப்படுத்துவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : DMK ,DMC ,elections , Local Elections, Ballot, Security, DMK, High Court, Petition
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக...