×

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

விருதுநகர்: விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி  ஏமாற்றி  ரூபாய் 20 லட்சம் வரை மோசடி செய்திருக்கிறார் ஒரு நபர். 8 ஆண்டுகளாக இந்த ஏமாற்று வேலையை செய்து வந்த அவர் போலீசாரிடம் இப்போது சிக்கியிருக்கிறார். அரசு வேளைகளில் சேர்வதற்கு தேர்வு முறைகள் உண்டு. எனினும் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி இளைஞர்கள் ஏமாறுவது அவ்வபொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து எவ்வளவுதான் செய்திகள் வந்தாலும் ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி காவல் நிலையத்தில் ஆர்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி எனும் பொறியியல் பட்டதாரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  திருவண்ணாமலை மாவட்டம் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவர் ரூ.2,60,000 பணம் பெற்று கொண்டதாகவும், ஆனால் கூறியபடி வேலை வாங்கிதராமல் ஏமாற்றி வந்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் வச்சகாரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ்  தலைமையில் தனிபடை அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்றது. இந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆதம்பாக்கம் அருகே உள்ள வடலூரில் பத்மநாபன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பத்மநாபன் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம்,  திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து  பத்மநாபனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பத்மநாபனிடம் வேறு யாரும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டார்.  


Tags : airport Youth ,airport , Airport, work, youth, fraud, arrest
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...