×

பிசான சாகுபடி பணிகள் மும்முரம் 30 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கும் பாபநாசம் அணை

நெல்லை : வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு நல்ல மழை கிடைத்ததன் பயனாக 30 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளளவில் பாபநாசம் அணை நீடிக்கிறது. இதனால் பிசான நெல் சாகுபடி விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், ேமற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் அமைந்துள்ளன. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 143 அடியாகும். இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் 5 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.

இந்த அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அது மட்டுமல்லாது, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக பாபநாசம் அணை திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதத்தில் தான் பாபநாசம் அணைக்கு அதிக நீர்வரத்து இருக்கும். பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பாபநாசம் அணை நிரம்பும். இந்த ஆண்டு துவக்கம் முதலே நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த நவ.27ம் தேதி பாபநாசம் அணை நிரம்பியது. ஒரு மாதத்திற்கு பிறகும் இன்று (டிச.27ம் தேதி) வரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிக்கிறது.

நேற்றைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.65 அடியாக உள்ளது. அணையில் 5 ஆயிரத்து 475 மில்லியன் கன அடி  (99.55 சதவீதம்) தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 155.41 அடியாக உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1189 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1226 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 115.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 548 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 315 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் 1.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையில் நீர் நிரம்பி  காணப்படும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நல்ல வெயில் நிலவி  வருகிறது. இதனால் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக  ஈடுபட்டுள்ளனர்.


Tags : Papanasam Dam ,Nellai , Papanasam Dam,Farmers ,nellai ,thoothudi
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!