×

இந்தியாவில் ஆண்களை விட பெண்களே மன அழுத்த பிரச்னையால் அதிக பாதிப்பு

*மருத்துவர்கள் தகவல்

சேலம் : இந்தியால் மன அழுத்த பிரச்னையால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று மனநலம் பாதிப்பு. கடந்த 2017ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், சுமார் 20 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி தவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு 14 சதவீத இந்தியர்கள் மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று சொன்ன நிமான்ஸ் என்ற அமைப்பு, இதில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்கு உடனடியாக மருத்துவ உதவி அவசியம் என்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்திருந்தது.
போதிய விழிப்புணர்வின்மை, உதாசீனமும் போதாமையும் நிறைந்த மருத்துவ சேவை ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 10 அல்லது 12 சதவீதம் பேருக்குத்தான் சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறதாம். இந்தியாவில் 3,827 பதிவு செய்யப்பட்ட உளவியல் மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சுமார் 13,500 மருத்துவர்களாவது தேவைப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதில், பெண்கள் நிலைதான் மிக மோசம் என்கிறது அவ்வமைப்பு. அதாவது மேஜர் டிப்ரஸிவ் எபிசோட் எனப்படும் மன அழுத்தப் பிரச்னைக்கு ஆண்களை விடவும் பெண்களே அதிகம் இரையாகின்றனர். சுமார் 50 சதவீத இந்தியப் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் சிறிய அளவிலான மனநல பாதிப்புகளை சமூகம் கண்டுகொள்வதே இல்லை. அறியாமை, மருத்துவ சேவையில் காட்டும் அலட்சியம், அரைகுறை மருத்துவம் ஆகியவற்றால் பெண்களின் பிரச்னை மேலும் தீவிரம் அடைகிறது.

குறிப்பாக, குழந்தை பிறப்பு மற்றும் அதற்குப் பிறகான நாட்களில் இந்தியப் பெண்கள் கடுமையான மனச்சோர்வும், தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றுக்கும் ஆளாகிறார்கள். இதில் 90 சதவீதம் பேருக்கு எந்தவிதமான மருத்துவ உதவியோ ஆறுதலோ கிடைப்பதில்லை.இதுகுறித்து மருத்துவர் கூறுகையில்,இன்றைய கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகளவு மனநல பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் பெண்களுக்கும் ஏற்படுகிறது.

குறிப்பாக திருமணமான பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு முன்பும் மற்றும் அதற்கு பிறகான நாட்களிலும் ஏற்படும் பிரச்னைகள், வேலை பார்க்கும் அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகளால் பாதிப்பு அடைக்கின்றனர். திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆண்களுக்கு ஏற்படும் பண பிரச்னை, திருமணம், குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களுக்கு போதியளவு விழிப்புணர்வு இல்லை. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஒரே தீர்வு குடும்பங்களின் அரவணைப்பு, பொழுதுபோக்கு போன்றவைதான். இதன் மூலம் மன அழுத்த பிரச்னையை தவிர்க்கலாம். மேலும், குடும்பங்களில் உள்ளவர்கள் பெண்களுக்கு பல்வேறு வேலைகளில் உதவி செய்வதன் மூலம் அவர்களுக்கு போதிய நேரம் கிடைக்கும். அப்போது, பெண்கள் பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் மன நல பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவார்கள் என்றார்.

சிகிச்சையிலும் அதிக பெண்கள்

சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் மனநல பிரச்னைகள் காரணமாக சுமார் 20 முதல் 25 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் 4 அல்லது 5 பேர் வரை மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 3:1 என்ற அடிப்படையில் பெண்கள்தான் மனநல பிரச்னையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

Tags : women ,India ,men ,Boys ,Girls , survey ,Boys ,girls ,Depression ,
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்