×

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து: சுமார் 9 பேர் உயிரிழப்பு என தகவல்!

அல்மட்டி: கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. அதில் 95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. விமானத்தின் ஒரு பகுதி நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 6 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து விமானம் டேக்ஆப் ஆனபோது போதிய உயரத்திற்கு எழும்பாததால், கான்கிரீட் வேலியில் மோதி பின்னர் அதனை ஒட்டியுள்ள 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரிகள், இடிபாடுகளில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை மீட்கும் பணிகளில் அவசர கால மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோக்காயேவ், விபத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின்படி கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள் என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Kazakhstan ,plane crash , Kazakhstan, plane crash, death
× RELATED தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக்...